ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்


ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 13 May 2021 5:32 AM GMT (Updated: 13 May 2021 5:32 AM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நேற்று இரவு தொடங்கியது. அங்கு உற்பத்தியான ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி தொடங்கியது. ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் இதனை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

முதற்கட்டமாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் இடங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. 4.820 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். 

சிலநாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story