தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வந்தால் 30 சதவீத மூலதன மானியம் சலுகைகளை தமிழக அரசு அறிவித்தது


தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வந்தால் 30 சதவீத மூலதன மானியம் சலுகைகளை தமிழக அரசு அறிவித்தது
x

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வந்தால் 30 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் 2-வது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை 11-5-2021 அன்று நடத்தினார்கள்.

சிறப்பு தொகுப்பு சலுகைகள்

அக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பின்வரும் சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது:-

* ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீதம் மூலதன மானியம் 2 சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் உற்பத்தியைத் தொடங்கவேண்டும். கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை செய்யப்படும் முதலீடுகளும் இதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

6 சதவீத வட்டி மானியத்தில் கடன்

* குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30 சதவீத மூலதனமானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு நிறுவனங்கள் 30-11-2021-க்கு முன்னர் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

* அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும்.

ஒற்றை சாளர முறையில் அனுமதி

* அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட்/சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

* அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.

ஊக்கம் அளிக்கும்

* கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணைபுரியும்.

இந்த சிறப்பு தொகுப்பு சலுகைகள் தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story