“மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்” உலகத் தமிழர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


“மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்” உலகத் தமிழர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 May 2021 1:02 AM GMT (Updated: 14 May 2021 1:02 AM GMT)

மக்களின் உயிர்காக்கஉதவிக்கரம் நீட்டுங்கள் என்று உலகத் தமிழர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி கோரியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “உலகத் தமிழர்களே. உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற தலைப்பில், தனது சமூக வலைதளப் பக்கங்களில் காணொலி உரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:-

மருத்துவ - நிதி நெருக்கடி

கொரோனா என்ற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் இப்போது 2 மிக முக்கியமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று கொரோனா என்கிற நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று, நிதி நெருக்கடி.

இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன்முயற்சிகளை தமிழக அரசு முழுமையாகச் செய்து கொண்டு வருகிறது. கொரோனா என்ற பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், தொற்றுக்கு உள்ளானவர்களைக் காப்பதற்குமான பணிகளில் கண்ணும் கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது.

முழு ஊரடங்கு

கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு நிவாரண நிதியை அரசு வழங்கி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா முதல் அலையைவிட 2-ம் அலை மிக மோசமானதாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசிகள் ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும்.

வேண்டுகோள்

படுக்கைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைப் பணியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குவீர் என்று நான் வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் நிதிகளைக் கொண்டுவந்து வழங்கி வருகிறார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள்.

மறக்க மாட்டோம்

புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள், தாய்த் தமிழகத்தை மறக்கவில்லை, மறக்க முடியாது என்பதன் அடையாளம்தான் இது போன்ற நிதி திரட்டும் நிகழ்வுகள் ஆகும். தனக்காக மட்டும் வாழாமல், ஊருக்காக, உலகத்துக்காக வாழும் உங்கள் உயர்ந்த உள்ளத்தின் வெளிப்பாடு தான் இந்த முன்னெடுப்பு ஆகும்.

மிகவும் சிக்கலான, நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் உதவியைச் செய்ய முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டி இருக்கிறீர்கள். தமிழக மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம்.

நிதி வழங்குங்கள்

மருத்துவ நெருக்கடியும் - நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களை காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும்.

ஈகையும், இரக்கமும், கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன். இவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ஆக்சிஜன் பயன்படுத்தும் படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்ற கொரோனா தடுப்புக்குத் தேவையான பயன்பாட்டுக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.

மீள்க தமிழகம்

இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படும். உங்கள் நிதி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்களின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள். வாழ்க தமிழகம். மீள்க தமிழகம்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருக்கிறார்.

Next Story