கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்: ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலின் தகவல்


கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்: ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலின் தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 2:20 AM GMT (Updated: 14 May 2021 2:20 AM GMT)

ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னையில் நேற்று நடந்த அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:-

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று நான் ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதியின்படி, உங்களது ஆலோசனைகளை பெறவே இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறேன்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசு பொறுப்பேற்கும் நாளுக்கு முன்பாகவே நோய்த்தொற்றின் தாக்கத்தையும் வேகத்தையும் உணர்ந்து, அதை எதிர்கொள்வது தொடர்பான அலுவலர்களின் கருத்துகளை அறிந்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வந்தேன்.

கட்டளை மையம்

கடந்த சில நாட்களில் இதுதொடர்பாக அரசு மேற்கொண்ட சில முக்கிய நடவடிக்கைகளை பற்றி உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தேவையான இடவசதி, ஆக்சிஜன் இருப்பு, ஆம்புலன்ஸ் தேவை போன்றவற்றை தனித்தனியே முறையாக ஒருங்கிணைத்து, இரவு பகல் பாராது கண்காணித்து மக்களுக்கு சேவை வழங்க ஒரு கட்டளை மையம் தொடக்கப்பட்டது.

ஆக்சிஜன் இருப்பை கண்காணிக்கவும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதை உறுதி செய்யவும் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் பெறுவதை ஒருங்கிணைக்கவும் தொழில்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஊக்கத்தொகை

கொரோனா நோய் தொற்றினை குணப்படுத்தும் அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையும், இப்பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பீடும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2-ம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் இருப்பு

தடுப்பூசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் செய்து வருகிறது.

ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு இது குறித்து அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு அதில் பலனும் கிடைத்துள்ளது. இருப்பினும் பெருகிவரும் தேவையைக் கருத்தில்கொண்டு, ஆக்சிஜன் இருப்பை மேலும் அதிகரிக்கவும் இந்த அரசு வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் விவரங்களை ஓரிரு தினங்களில் நான் அறிவிக்க இருக்கிறேன்.

புதிய படுக்கைகள்

ரெம்டெசிவிர் மருந்து மாநிலம் முழுவதும் தேவைப்படுவதால், முக்கிய நகரங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. பலருக்கு ஆயுர்வேதா சித்தா மற்றும் யுனானி போன்ற மருத்துவ சிகிச்சை வகைகள் நம்பிக்கையும் பலருக்கு பலனும் கிட்டுவதாக தெரிவிக்கப்படுவதால் தாம்பரத்தில் இதற்கென தனி சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக, சிங்கப்பூர், தைவான் போன்ற வெளிநாடுகளில் இருந்து அரசு மூலமாகவும், தொழில் நிறுவனங்கள் மற்றும் கொடையாளர்கள் மூலமாகவும், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

தற்போதைய நோய்த்தொற்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவிலான மக்களைப் பாதித்து வருவதால், ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகளின் தேவையும் உயர்ந்து வருகிறது.

இதனை எதிர்நோக்கி, கூடுதல் எண்ணிக்கையிலான புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதிதாக படுக்கைகள் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

விலை நிர்ணய கூட்டம்

நோய் தொற்றுக்கான சோதனை முடிவுகளை விரைந்து மக்களுக்கு தெரிவிக்கவும் சோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் தனியார் பரிசோதனை மையங்களும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை முறையாக நிர்ணயம் செய்யவும் விலை நிர்ணய குழு கூட்டத்தை உடனடியாக நடத்தவும் ஆணையிட்டுள்ளேன்.

கொரோனா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த அமைப்புகள் உடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சலுகைகளை இந்த அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதனால் தொழில் வர்த்தகம் பாதுகாக்கப்பட்டு பொருளாதாரம் நிலைத்தன்மை பெற்று இருப்பது உறுதி செய்யப்படும்.

குறுகிய காலத்தில்...

இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை இந்த குறுகிய சில நாட்களில் இந்த அரசு எடுத்து வருகிறது. பெருகி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து, முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நம் மக்களை பாதுகாத்திட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறைந்த அளவு பாதிப்புடன், இறப்புகளை பெருமளவில் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த தளர்வுகளை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படலாமா? அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா? என்பது குறித்த உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story