ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் தொடங்கியது தமிழகத்திற்கே வழங்கப்படும் என்று கலெக்டர் தகவல்


ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் தொடங்கியது தமிழகத்திற்கே வழங்கப்படும் என்று கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 2:56 AM GMT (Updated: 14 May 2021 2:56 AM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கே வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில், தங்களது ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில், 7 பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவையும் அமைத்தது.

ஆக்சிஜன் உற்பத்தி

ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் உற்பத்தி நிலையம் முழுமையாக பராமரிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கின. அதன்படி நேற்று அதிகாலை வரை மருத்துவ பயன்பாட்டுக்காக சுமார் 5 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு...

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜன் நேற்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரும், கண்காணிப்பு குழு தலைவருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கி, திரவ ஆக்சிஜன் ஏற்றிய டேங்கர் லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கே வழங்கப்படும்

ஸ்டெர்லைட் ஆலையில் நிலையான உற்பத்தி வரும் வரை இன்னும் 2 அல்லது 3 தினங்களுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 10 டன் அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்து பெறமுடியும். பின்னர் இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விரைவில் முழு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி கொள்ளளவான 35 டன் ஆக்சிஜனையும் தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது தயார் செய்து அனுப்பப்பட்டு உள்ள ஆக்சிஜன், ஆய்வக பரிசோதனையில் 98 சதவீதம் தூய்மைத் தன்மை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்துக்கே வழங்கப்படும். ஆக்சிஜனை எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும். அதன்படி இங்கிருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story