தமிழகத்தில் பரவல் வேகம் அதிகரிப்பு: 30,621 பேருக்கு கொரோனா 297 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் பரவல் வேகம் அதிகரிப்பு: 30,621 பேருக்கு கொரோனா 297 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 May 2021 3:14 AM GMT (Updated: 14 May 2021 3:14 AM GMT)

தமிழகத்தில் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 30,621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17,532 ஆண்கள், 13,089 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 6,991 பேரும், கோவையில் 2,835 பேரும், செங்கல்பட்டில் 2,173 பேரும், மதுரையில் 1,331 பேரும், திருவள்ளூரில் 1,251 பேரும், கன்னியாகுமரியில் 1,079 பேரும், ஈரோடில் 910 பேரும், திருச்சியில் 940 பேரும், நெல்லையில் 781 பேரும் குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சியில் 150 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

297 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 188 பேரும், தனியார் மருத்துவமனையில் 109 பேரும் என 297 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 88 பேர் பலி

நேற்று சென்னையில் 88 பேரும், செங்கல்பட்டில் 32 பேரும், திருவள்ளூரில் 22 பேரும், கன்னியாகுமரியில்18 பேரும், கோவையில் 13 பேரும், காஞ்சீபுரத்தில் 12 பேரும், தஞ்சாவூரில் 11 பேரும், திருச்சியில் 10 பேரும், மதுரையில் 9 பேரும், திண்டுக்கலில் 7 பேரும், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருப்பத்தூர், தூத்துக்குடியில் தலா 6 பேரும், வேலூரில் 5 பேரும், கடலூர், நாமக்கல், தேனி, நெல்லையில் தலா 4 பேரும், தர்மபுரி, கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகரில் தலா 3 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரியில் தலா 2 பேரும், நீலகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 32 மாவட்டங்களில் 297 உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதில் இணை நோய் அல்லாத 78 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 768 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,287 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story