மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு + "||" + The decision was taken at a meeting chaired by MK Stalin to intensify the curfew to control the spread of corona infection in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கை மேலும் தீவிரப் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மாநிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.

ஒரு பக்கம் முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பது, மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்துவது என தமிழக அரசு முழுமூச்சாக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

தமிழகத்தில், முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்தாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா வேகத்தை குறைக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதன்படி கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கும் வகையில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் ‘அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்’ நேற்று மாலை நடந்தது.

மு.க.ஸ்டாலின் தலைமையில்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் என்ற முறையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், டாக்டர் வெ.பரமசிவம், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரணி எம்.எல்.ஏ., முனிரத்தினம்,

பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கட்சியின் துணைத்தலைவர் எம்.என். ராஜா, பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி, ம.தி.மு.க. சார்பில் எம்.பூமிநாதன், கு.சின்னப்பா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ம.சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிசார்பில் வீ.பி. நாகைமாலி, மா.சின்னதுரை, இந்தியகம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராமச்சந்திரன், க.மாரிமுத்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

5 தீர்மானங்கள்

முன்னதாக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வந்தவர்களை தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார். அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததுடன், ‘தமிழக அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர். தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவது

* கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

* நோய் தொற்று வேகமாக பரவி வரும் இக்கால கட்டத்தில், அனைத்து கட்சியினரும் பொது கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

* நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்து கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

* நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஓர் ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

* அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், ஒருமனதாக அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதிகாரிகள் பங்கேற்பு

இக்கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் அதுல்ய மிஸ்ரா, க.பணீந்திர ரெட்டி, முதன்மை செயலாளர்கள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ப.செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், பொதுத்துறையின் அரசு செயலாளர் டி.ஜகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அல்லாத நோய்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை: ஒ.பன்னீர்செல்வம்
கொரோனா அல்லாத நோய் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு
கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. கொரோனாவுக்கு 4 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,837 ஆக குறைந்தது
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. புதிதாக 198 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.