கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதியுதவி அளிக்கும் தொழிலதிபர்கள்


கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதியுதவி அளிக்கும் தொழிலதிபர்கள்
x
தினத்தந்தி 15 May 2021 1:31 AM GMT (Updated: 15 May 2021 1:31 AM GMT)

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொழிலதிபர்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்த நிதி, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்படுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. முழு ஊரடங்கு பிரப்பித்தும், இன்னும் பாதிப்பின் அளவு குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றும் பலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நிதியுதவி அளித்தனர்.

அதன்படி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என்.ராமச்சந்திரன் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது, தயாநிதிமாறன் எம்.பி. உடன் இருந்தார். இதேபோல், லலிதா ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் எம்.கிரண்குமார் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

மேலும், ஏபெக்ஸ் லெபாரட்டரிஸ் நிறுவனத் தலைவர் வணங்காமுடி ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது, சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் மற்றும் சுபாஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.

சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தின் வேந்தர் என்.எம்.வீரய்யன் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை சார்பில், அதன் செயல் இயக்குநர் டாக்டர் அருண் என்.பழனிசாமி மற்றும் தலைமை செயல் அலுவலர் எஸ்.கார்த்திகேயன் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

இதேபோல், கே.பி.ஆர். மில் நிறுவனத்தின் சார்பில் அதன் செயல் இயக்குனர் சி.ஆர்.அனந்தகிருஷ்ணன் ரூ.1 கோடிக் கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆர்.சேதுராமன் மற்றும் துணை வேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியன் ஆகியோர் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் யுவராஜ் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது, அவரது மனைவி கனி யுவராஜ் உடன் இருந்தார். அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் அகில இந்திய பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், மாநில செயலாளர் இ.அருணாசலம், மாநில தலைவர் சி.எஸ்.வேணுகோபால் ஆகியோர் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

நருவி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் ஜி.வி.சம்பத், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது, மருத்துவமனையின் துணைத் தலைவர் அனிதா சம்பத், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். சி.எஸ்.ஐ. சென்னை பேராயர்கள் சார்பில் எஸ்.ஜார்ஜ் ஸ்டிபன், மேனுவல் எஸ்.டிட்டோ, ஜான் ஜெயகரன் மற்றும் நிர்வாகிகள் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

மேலும், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், வி.ஜி.பி. குழுமத்தின் சார்பில் ரூ.10 லட்சம் காசோலையையும், குளோபசி பில்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும் வழங்கினார்கள்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சார்பில், பொதுச் செயலாளர் வி.அன்புராஜ், தந்தை பெரியார் அறக்கட்டளை பிரசார நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சம் காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

எம்.ஜி.ஆர். இல்லத்தின் சார்பில், டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் லதா ராஜேந்திரன் ரூ.10 லட்சம் காசோலை வழங்கினார். அதேபோல், கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விசாரணை ஆணையத்தின் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Next Story