ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டும் வழங்குவதா? ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனையை அதிகரிக்க கோரி சாலைமறியல்


ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டும் வழங்குவதா? ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனையை அதிகரிக்க கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 16 May 2021 1:38 AM GMT (Updated: 16 May 2021 1:38 AM GMT)

ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டும் விற்பனையா? என கேள்வி எழுப்பி, ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனையை அதிகரிக்க கோரி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து, உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழகத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து தேவை 20 ஆயிரமாக உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து 7 ஆயிரம் அளவில் தான் தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் வழங்கப்படுகிறது.

இதனால் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருபவர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவிலே மருந்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வினியோகம் தொடங்கப்பட்டது.

அதன்பிறகு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அங்கும் மருந்து வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, நெல்லை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் தொடங்கப்பட்டது.

ஆனாலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் வந்து குவியும் பொதுமக்கள் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை. மேலும், நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்பட்டதால், பலர் நீண்ட நாட்களாக காத்திருந்தும் மருந்து கிடைப்பதில்லை. டோக்கன் முறையிலும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தநிலையில், தினமும் கூட்டம் அதிகரிப்பதாலும், தொற்று பரவலை தடுப்பதற்காகவும், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் இடம் சென்னை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்படி நேற்று முதல் நேரு ஸ்டேடியத்தில் 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு முதலே நேரு ஸ்டேடியம் முன்பு குவியத்தொடங்கினர். 500-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள், முதியவர்கள் அந்த கூட்டத்தில் சிக்கி தவித்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை 9 மணி அளவில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. அதில் முதலில் வந்த 300 பேரை மட்டும் போலீசார் உள்ளே மருந்து வாங்க அனுமதித்தனர். மற்றவர்களை திரும்பி செல்லுமாறும், நாளை (திங்கட்கிழமை) வந்து மருந்து பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். ஆனால் பொதுமக்கள், மருந்து கிடைத்தால் தான் இந்த இடத்தை விட்டு நகருவோம் என மறுத்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ரெம்டெசிவிர் மருந்துக்காக இன்னும் எத்தனை நாட்கள் தான் நாங்கள் காத்திருக்க வேண்டும்?. மருந்துக்காக தமிழக அரசு எங்களை அங்கும், இங்குமாக அலையவிட்டு, கடைசியில் சாலையில் அமர்ந்து போராட வைத்து விட்டது.

இந்த மருந்தை நேரடியாக ஆஸ்பத்திரியிலேயே அரசு வினியோகிக்கலாமே. ஏன் மக்களிடம் அரசு விற்பனை செய்கிறது?. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, 500 பேருக்கு மருந்து வினியோகம் செய்தது. ஆனால் இங்கு 4 கவுண்ட்டர்கள் அமைத்து வெறும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வினியோகிக்கிறது.

மருந்து வாங்க நாங்கள் நாள் கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர். மருந்தின் தேவையை கருதி மருந்து விற்பனையை அதிகப்படுத்தாமல் ஏன் இப்படி எங்களை அரசு அலைக்கழிக்கிறது. எனவே உயிருக்கும் போராடும் எங்கள் உறவுகளை காப்பாற்ற, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்து விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும், பலர் நேரு ஸ்டேடியத்தின் வாசலில் அமர்ந்து மருந்து வாங்கி செல்வதில் உறுதியாக உள்ளனர். இந்த சம்பவத்தால் நேற்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story