காலை 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைப்பு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது


காலை 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைப்பு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 16 May 2021 2:02 AM GMT (Updated: 16 May 2021 2:02 AM GMT)

தமிழகத்தில் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அனைத்து கடைகளும் காலை 10 மணிக்கு அடைக்கப்பட்டன. தளர்வில்லா முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னை, 

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா பரவல் 2-வது அலை தமிழகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

என்னதான் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சாக நடந்துகொண்டிருந்தாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. நாளுக்குநாள் கொரோனாவின் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முழு ஊரடங்கில் புதியகட்டுப்பாடுகள் வரைமுறைப்படுத்தப்பட்டன.

அதன்படி தமிழகம் முழுவதும் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. சென்னையிலும் நேற்று ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி, இதுவரை பகல் 12 மணி வரை செயல்பட்ட கடைகள், நேற்று காலை 10 மணியுடன் மூடப்பட்டன.

அதன்படி காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி-மீன் மார்க்கெட்டுகள் என அனைத்து கடைகளுமே நேற்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட்டன. இதுவரை செயல்பட்டு வந்த டீக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் போன்றவையும் அரசு உத்தரவுப்படி நேற்று மூடப்பட்டு இருந்தன.

அதேவேளை ஓட்டல்கள் திறக்க அனுமதி இருந்தாலும் 50 சதவீத ஓட்டல்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. ஓட்டல்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட்டன. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பாலகங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசியமான சேவைகள் தடையின்றி நடந்தன.

ஏற்கனவே போக்குவரத்து சேவை முடக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் முழு ஊரடங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டாலும், சாலைகளில் நேற்று காலை 10 மணி வரை ஓரளவு வாகனங்கள் சென்றதையே பார்க்க முடிந்தது. பிற்பகலுக்கு மேல் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்தது.

அதனைத்தொடர்ந்தே சாலைகளில் வாகனங்களின் நடமாட்டம் குறைய தொடங்கியது. அந்தவகையில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, டைடல் பார்க் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, அடையாறு எல்.பி. சாலை, ராஜாஜி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் வைத்திருந்தனர். சில மேம்பாலங்கள் மூடப்பட்டன.

அதேபோல காலை 10 மணிக்கு மேல் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று காலை 10 மணிக்கு மேல் வெறிச்சோடின. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடியது.

குறிப்பாக புரசைவாக்கம் தானா தெரு, அண்ணாநகர், சவுகார்பேட்டை, அமைந்தகரை, செனாய்நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நடைபாதை கடைகள் நிறைந்த பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடின. இதனால் முழு ஊரடங்கின் எதிரொலி நேற்று அப்பட்டமாக நகரில் தெரிந்தது.

சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேவேளை தமிழகம்முழுவதும் தளர்வில்லாமுழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று இறைச்சி, மளிகை, காய்கறி என எந்த கடைகளும் திறக்கப்படாது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தளர்வில்லா ஊரடங்கு என்பதால் சாலைகள், இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story