கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கி சென்றனர்


கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 16 May 2021 2:05 AM GMT (Updated: 16 May 2021 2:05 AM GMT)

தமிழகம் முழுவதும் கொரோனா முதற்கட்ட நிவாரண நிதியாகரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகளில் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

சென்னை, 

தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் உடனடியாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாகரூ.2 ஆயிரம் 15-ந் தேதி (நேற்று) முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, கடந்த சில நாட்களாக வீடு தோறும் இதற்கான ‘டோக்கன்’கள் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ‘டோக்கன்’ வழங்கும் பணி முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் (காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை) ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

ரேஷன் கடைகளில் ஏற்பாடு

சென்னையிலும் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரொக்கப்பணம் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியை பெற்று சென்றனர். ரேஷன் கடைகளுக்கு முன்பு அந்தந்த பகுதி தி.மு.க.வினர் சார்பில் சாமியானா பந்தல்கள் போடப்பட்டு, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

ரேஷன் கடைகளுக்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்து நிவாரண நிதி பெற உதவினர். கூட்டம் சேராதவாறு ஒலிபெருக்கி மூலம் அடிக்கடி போலீசார் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கலவை செட்டி தெருவில் உள்ள ரேஷன் கடையில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தயாநிதி மாறன் எம்.பி., பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது, ‘அனைவரும் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும்’ என பொதுமக்களிடம், உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதேபோல தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலரும் தங்கள் தொகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

தினமும் 200 பேர் வீதம்...

டோக்கன் அடிப்படையில் தினமும் 200 பேர் வீதம் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் டோக்கன் பெற்றுள்ளோருக்கு தடையின்றி ரேஷன் கடைகளில் இன்று நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘‘நிவாரண நிதி வழங்குவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி முழுமையாக வழங்கி முடிக்கப்படும். எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த பணி சிறப்பாக முழுமையடையும். எனவே பொதுமக்கள்முண்டியடித்து ரேஷன் கடைகளில் குவியவேண்டாம். நிதானமாகவே வாங்கி கொள்ளலாம்’’ என்று ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story