ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி


ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
x
தினத்தந்தி 17 May 2021 5:01 AM GMT (Updated: 17 May 2021 5:01 AM GMT)

தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்தின் ஒதுக்கீடு அளவை உயர்த்தியதற்காக, பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. போதுமான கையிருப்பு இல்லாததால் மாநில முழுவதும் அரசு மருத்துவமனையில் முன்பு ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்தை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

சில இடங்கில் இரவு முழுவதும் காத்துக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பூசிகளின் அளவை அதிகரிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடிதம் எழுதி இருந்தனர்.  

இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 20 ஆயிரம் என்ற அளவில் மத்திய அரசு ரெம்டெசிவிரின் அளவை உயர்த்தியது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்தின் ஒதுக்கீடு அளவை உயர்த்தியதற்காக, பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனது வேண்டுகோளின் பேரில் தமிழ்நாட்டின் ரெம்டெசிவிரின் ஒதுக்கீட்டை அதிகரித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அரசுக்கு மிகவும் தேவையான இந்த சப்ளை உதவும், இது நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வு அளிக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.




Next Story