பஸ், ரெயில் நிலையம் உள்பட பொது இடங்களில் நீராவி பிடித்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை


பஸ், ரெயில் நிலையம் உள்பட பொது இடங்களில் நீராவி பிடித்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 May 2021 11:41 PM GMT (Updated: 17 May 2021 11:41 PM GMT)

பஸ், ரெயில் நிலையங்கள் உள்பட பொது இடங்களில் பொதுமக்கள் நீராவி பிடித்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், பெருநகர சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து பல்வேறு இடங்களில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஈஞ்சம்பாக்கத்தில் 33 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளும், விருகம்பாக்கத்தில் 40 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது ஒரு மனநிறைவை தருகிறது. 3 நாட்களுக்கு முன்பு வரை 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று, அதன்பிறகு 500 என்ற எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.

சென்னையில் பொதுமக்கள் யாரும் ஆக்சிஜன் வசதியை தேடி அலையக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சரின் உத்தரவுக்கிணங்க, சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 995 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக 11 ஆயிரத்து 800 களப்பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், முதல் முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமையில் இருப்பவர்களை, நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று, மருத்துவ ஆலோசனை வழங்கி சிகிச்சை அளிக்க 15 மண்டலங்களுக்கு 300 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்து வருகின்றனர். இது பெரிய அளவிலான பலனை தரும்.

லயோலயா கல்லூரி போல 22 இடங்களில் கொரோனா பராமரிப்பு மையங்கள் இருக்கின்றன. இங்கு 6,982 படுக்கைகள் உள்ளன. அதில் 2,686 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 4,296 படுக்கைகள் காலியாக உள்ளது. எனவே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இல்லாதவர்கள், பராமரிப்பு மையங்களில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளலாம்.

5 மாதத்துக்குள் தடுப்பூசி

தமிழகத்தில் 77 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை முகாம்கள் அமைக்கப்பட்டு, தினமும் 30 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே சென்னையில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்ற நிலையை மக்கள் கொண்டு வர வேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு.

தமிழக முதல்-அமைச்சர் 1.5 கோடி தடுப்பூசியை மத்திய அரசின் மூலமும், மீதமுள்ள 3.5 கோடி தடுப்பூசியை உலகளாவிய டெண்டர் மூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் 5 மாதத்துக்குள் ஒட்டுமொத்த பேரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டோம் என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்.

பொது இடங்களில்...

பொது இடங்களில் நீராவி பிடிக்க கூடாது. பஸ், ரெயில் நிலையங்கள் உள்பட பொது இடங்களில் நீராவி பிடித்தால், தொற்று பாதித்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சுலபமாக பரவி, உடனடியாக நுரையீரல் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது. மேலும், அந்த நீராவி புகையால், சுவாசிப்பவரின் நுரையீரலும் பாதிக்கும். யாராக இருந்தாலும், இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் டாக்டர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன், டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story