கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடமை தவறிய பா.ஜ.க. அரசு: வைகோ கண்டனம்


கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடமை தவறிய பா.ஜ.க. அரசு: வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 18 May 2021 1:36 PM GMT (Updated: 18 May 2021 1:36 PM GMT)

மத்திய பா.ஜ.க. அரசு கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் கடமையில் தவறி செயல்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

சாட்டை அடி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. ஒரே நாடு ஒரே மொழி என்ற முழக்கத்துடன், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சிக்கின்றது, மாநில அரசுகளை, குற்றேவல் புரியும் அடிமைகள் ஆக்க முனைகின்றது. புதிய கல்விக் கொள்கை குறித்து, மாநில கல்வி அமைச்சர்களுடன் பேசாமல், நேரடியாக கல்வித்துறை செயலர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசு நடத்திய கூட்டத்தில், தமிழக அரசு பங்கு ஏற்காது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருப்பது, பா.ஜ.க. அரசுக்கு சாட்டை அடி ஆகும்.

எதிர்கட்சிகளை ஒடுக்க..

மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க, மதவெறியைத் தூண்டினர். அந்த மாநிலத்தின் கவர்னர் ஜெகதீப் தங்கர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே, தன்னை சூப்பர் முதல்-மந்திரியாக கருதிச் செயல்பட்டு வருகின்றார். தமிழ்நாட்டிலும் இதேபோலத்தான், கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருகின்றார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாத ஆத்திரத்தில், நரேந்திர மோடியும், அமித்ஷாவும், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., கவர்னர் பொறுப்பு என அரசு அமைப்புகள் அனைத்தையும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

கடமை தவறிய அரசு

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் கடமையில் தவறி பா.ஜ.க.அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்திய மக்கள் ஆட்சி கோட்பாடுகளைச் சிதைப்பதற்கும் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு, ம.தி.மு.க. வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story