கொரோனா பரவலை தடுக்க ஆலோசனை வழங்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு அமைத்தது வரவேற்கத்தக்கது; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


கொரோனா பரவலை தடுக்க ஆலோசனை வழங்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு அமைத்தது வரவேற்கத்தக்கது; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 18 May 2021 5:26 PM GMT (Updated: 18 May 2021 5:26 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனைக்குழுவை அரசு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி

சென்னை தலைமைச்செயலகத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை தலைமைச்செயலாளரிடம் நேரடியாக வழங்கினோம். அனைத்து கட்சி கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியிருக்கிறோம். கொரோனா நோய்த் தடுப்புக்கு அரசு எடுக்கும் நடடிவக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்போம்.

வரவேற்பு

கொரோனா விவகாரத்தில் தற்போது அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல வரவேற்கக்கூடிய விஷயம்தான். ஆனால் இன்றைக்கு உள்ள நிலைமை என்ன? ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. புதைப்பதற்குகூட ஆன்லைனில் பதிவு செய்யக்கூடிய நிலைமை உள்ளது என்பது மிகவும் வேதனையாக, கவலைப்படக்கூடிய விஷயமாகத்தான் உள்ளது.

ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் இறந்துபோவது மக்கள் துன்பத்திற்கு ஆளாகி வரும் நிலையில், எப்படி அ.தி.மு.க. அரசு செயல்பட்டு மக்களின் பாராட்டை பெற்றதோ, அதுபோல முழு வீச்சில் இந்த அரசும் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு.

ஐகோர்ட்டு கருத்து

கொரோனா பரிசோதனை கூட சரியாக செய்வதில்லை என்று ஐகோர்ட்டு சான்றளித்துள்ளது என்றால் இதைவிட இந்த ஆட்சிக்கு வேறு சான்று இருக்க முடியாது. எனவே சோதனைகளை ஒரு பக்கம் அதிகப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும்.

ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். கள்ளச்சந்தையில் சில கருப்பு ஆடுகள் விற்பனை செய்யும் செயல்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது? எத்தனை பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது? என்பதை தெரியபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story