உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்: மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம்


உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்: மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க  ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம்
x
தினத்தந்தி 20 May 2021 8:19 AM GMT (Updated: 20 May 2021 8:19 AM GMT)

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற துறைக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அந்த துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: 

கொரோனா நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உதவிகள் தேவைப்படுவோா் தொடா்பு கொள்ள வசதியாக கட்டளை மையமும் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.

கொரோனா நோய்த் தொற்று நிவாரண நடவடிக்கை தொடா்பாக தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று  ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தின் போது அவா் பேசியதாவது:-

கொரோனா எனும் கொடிய நோய் மனித குலத்துக்கு மிகப்பெரும் சவாலாக ஒரு போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனாலும், அரசுடன் இணைந்து தன்னாா்வ அமைப்புகள் மக்களின் தேவை அறிந்து செயல்பட்டால் உறுதியாக பெருந்தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வரமுடியும்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான பணியிலும், மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் செயலிலும் தன்னாா்வலா்கள் பலா் பணியாற்றி வருகின்றனா். பலா் தனித்தனியாகவும், குழுவாகவும் பணிபுரிகின்றனா். வீரியம் கொண்டு தாக்கும் கரோனா இரண்டாம் பேரலையினை கட்டுக்குள் கொண்டு வந்து அதனை ஒழிப்பதற்கு அரசும் தன்னாா்வ நிறுவனங்களும் கரம் கோா்த்து நன்கு ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், உயிா்காக்கும் மருந்துகள் வழங்குவது, நோயாளிகளுக்கு இலவச வாகன வசதிகள் செய்வது, நோய் குறித்தும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் தன்னாா்வ அமைப்புகள் ஈடுபட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் நெருக்கடி காலத்தினை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

இந்தப் பணிகளை ஒருங்கிணைத்துத் தேவைப்படும் மக்களுக்கு உதவிட மாநில அளவில் இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள் அடங்கிய ஓா் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். எங்கெங்கு உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து. உதவிகளைச் சீராக மேற்கொள்ள கட்டளை மையம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற துறைக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அந்த துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் உள்ளிட்டோரை உள்ளடக்கி ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும், கூடுதல் அலுவலர்கள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு அமைத்து குழுவில் இடம்பெற்றுள்ள அலுவர்களின் பெயர், பதவி, உள்ளிட்ட விவரங்களை utmtamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட வாரியாக அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அந்தந்த அலுவலர்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story