கொரோனா நோயாளிகளின் உடலை எரிக்க பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


கொரோனா நோயாளிகளின் உடலை எரிக்க பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 May 2021 6:46 PM GMT (Updated: 20 May 2021 6:46 PM GMT)

கொரோனா நோயாளிகளின் உடலை எரிக்க சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

முழு ஊரடங்கு
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், இங்கு முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் சி.கனகராஜ் ஆஜராகி கூறியதாவது:-

தடுப்பூசியின் சக்தி
தமிழக முதல்-அமைச்சர் கொரோனா பரவலை தடுக்க உன்னதமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது போடப்படும் தடுப்பூசிகளின் சக்தி நம் உடலில் 8 மாதங்கள் தான் இருக்கும் என்று ஐ.சி.எம்.ஆர். அறிக்கை கூறுகிறது. அதனால் 8 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி மீண்டும் போட வேண்டுமா? தெலுங்கானா மாநிலத்தில், ரஷியா தயாரித்துள்ள 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதுபோல தமிழகத்திலும் தடுப்பூசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அரசு ஆலோசனை
கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை சட்டவிரோதமாக வசூலிக்கின்றனர். இதை தடுக்க உத்தரவிட வேண்டும். பணம் வசூலித்தவர்கள் மீது சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தற்போது போடப்படும் தடுப்பூசியின் சக்தி உடலில் 8 மாதம் தான் இருக்கும் என்று கூறப்படுவதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆலோசனை நடத்தி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

கடுமையான நடவடிக்கை
மேலும், “இறுதிச்சடங்கு செய்யும்போது இறந்தவர்களின் உடலை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். இலவசமாக உடலை எரியூட்டும் சுடுகாட்டில் பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. எனவே, உள்ளாட்சி துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து இதை தடுக்க வேண்டும். பிணத்தை எரிக்க பணம் வாங்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story