அரபிக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்


அரபிக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 20 May 2021 7:55 PM GMT (Updated: 20 May 2021 7:55 PM GMT)

அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

நாகப்பட்டினம் மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர், அவரது தந்தை இடும்பன் (55), சகோதரர் மணிவேல் (26), முருகன் (40), தினேஷ் (33), இளஞ்செழியன் (35), பிரவீன் (25), கணேசமூர்த்தி (35), முகமது உசேன் ஆகிய 9 மீனவர்கள் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.அரபிக்கடலில் உருவான ‘டவ்தே' புயல் எச்சரிக்கையால் அவர்கள் அவசரமாக கொச்சி துறைமுகத்துக்கு திரும்பியபோது காணாமல் போயினர். இதுவரையில் கரை திரும்பாததால், அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

பிரதமருக்கு கடிதம்
இந்தநிலையில் காணாமல் போன தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் அரபிக்கடல் ஆழ் பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடந்த ஏப்ரல் 29-ந்தேதி புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் இன்னும் திரும்பவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.அவர்கள் ‘டவ்தே' புயலில் சிக்கி இருப்பார்களோ என்று எண்ணி, அவர்களது நிலை தெரியாமல் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடற்படை, விமான படை
எனவே மாயமான மீனவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவர்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கடற்படை, விமான படைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story