இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதி: ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த 2 நாட்களில் 10,200 வாகனங்கள் பறிமுதல்; சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்


இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதி: ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த 2 நாட்களில் 10,200 வாகனங்கள் பறிமுதல்; சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்
x
தினத்தந்தி 20 May 2021 8:04 PM GMT (Updated: 20 May 2021 8:04 PM GMT)

இ-பதிவு இருந்தால் மட்டுமே மாவட்டங்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 10 ஆயிரத்து 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு ஊரடங்கு எனும் ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அவசியமில்லா பணிகளுக்கு வெளியில் வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ள நிலையிலும், பலர் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் வெளியில் சுற்றி வந்ததை பார்த்து, இது ஊரடங்கு தானா? என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.இதையடுத்து ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்த உடனே, போலீசாரின் கெடுபிடிகளும் அதிகமாகின. அதற்கேற்றாற்போல், மாவட்டங்களை விட்டு மாவட்டங்கள் செல்வோர் இ-பதிவு கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல், சென்னையை பொறுத்தவரையில் போலீஸ் சரக பகுதிகளுக்கு இடையே சென்று வருவதற்கும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

போலீசார் கெடுபிடி
அதன்படி, கடந்த 18-ந்தேதியில் இருந்து போலீசார் சென்னை முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மொத்தம் 153 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து அத்தியாவசியமின்றி சுற்றி திரிபவர்களை மடக்கி பிடித்து வருகின்றனர்.அந்த வகையில் கடந்த 18-ந்தேதி ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 3 ஆயிரத்து 422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 ஆயிரத்து 428 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.அதன் தொடர்ச்சியாக கடந்த 19-ந்தேதியும் (நேற்று முன்தினம்) போலீசார் கெடுபிடி காட்டினர். பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இ-பதிவு இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களை மட்டும் அனுமதித்தனர். அவ்வாறு தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் 4 ஆயிரத்து 772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 3 ஆயிரத்து 502 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

10 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்
கடந்த 2 நாட்களில் மட்டும் போலீசாரின் தீவிர சோதனையில், அத்தியாவசிய தேவையின்றி, இ-பதிவு இல்லாமல் வெளியில் சுற்றியவர்களின் 10 ஆயிரத்து 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல் வரும் நாட்களில் போலீசாரின் சோதனை தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.பெரும்பாலானோர் அத்தியாவசிய பொருட்களை தங்களுடைய வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்காமல் தொலைதூரமாக பயணம் செய்து வாங்கும் வழக்கத்தை கொண்டு இருக்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாலும், பொது மக்களில் சிலர் அதை கேட்காமல் வெளியில் வந்த வண்ணம் இருக்கின்றனர் என்று போலீசார் குமுறுகின்றனர்.

Next Story