அந்தமான் பகுதிகளில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைகிறது; வானிலை ஆய்வு மையம் தகவல்


அந்தமான் பகுதிகளில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைகிறது; வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 20 May 2021 9:40 PM GMT (Updated: 20 May 2021 9:40 PM GMT)

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்று (வெள்ளிக்கிழமை) உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுதவிர வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், இது அதே இடத்தில் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) புயலாக வலுவடையும் என்றும் அதனைத்தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து 26-ந்தேதி ஒடிசா கடற்கரைக்கும், மேற்கு வங்க கடற்கரைக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால், நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதுதவிர வெப்பசலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story