கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டே நோயாளி உயிரிழப்பு; உறவினரின் கதறல் வீடியோ வெளியான நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டே நோயாளி உயிரிழப்பு; உறவினரின் கதறல் வீடியோ வெளியான நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் குழாய் அகற்றப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தி வெளியான நிலையில், அவர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டே உயிரிழந்தார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் அரசு மருத்துவமனை
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் குழாய் அகற்றப்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறி அந்த நோயாளியின் உறவினர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இந்த நிலையில் அதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சந்தேகத்தின்பேரில் ராஜா (வயது 49) என்பவர் கடந்த 5-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் நுரையீரல் பாதிப்பு 80 சதவீதம் முதல் 90 சதவீதம் என்று “சி.டி. டெஸ்ட்”டில் தெரியவந்தது. அவருக்கு 8-ந்தேதியன்று ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்தது.நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தமையால் அனுமதித்த நாள் முதல் என்.ஆர்.எம். முககவசம் மூலம் ஆக்சிஜன் ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 15 லிட்டர் வரை அவருக்கு செலுத்தப்பட்டு வந்தது.

உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்
18-ந்தேதியன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60 சதவீதம் இருந்ததால் அவருக்கு “எச்.எப்.என்.ஓ.” முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19-ந்தேதியன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் “சி-பேப்” என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றியவுடன் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருந்தது.இந்த நிலையில் 20-ந்தேதியன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் செலுத்தும் முககவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளிக்கு ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 30 சதவீதம் மட்டுமே இருந்தநிலையில், மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்தது.இந்த நிலையில் நோயாளி மணிகண்டனுக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டதால், தரைத்தளத்தில் இருந்த ‘சி-பேப் மெஷின் ஆக்சிஜன்' பின்னை பொருத்த முயற்சி செய்யப்பட்டு அது பொருந்தாமையால் நோயாளியின் உயிர்காக்கும் பொருட்டு தரைதளத்தில் இருந்த சி-பேப் மெஷின் ஆக்சிஜனை முதல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நோயாளி ராஜா அருகில் இருந்த ஆக்சிஜன் பின்னை பொருத்தி தயார் நிலையில் வைத்தனர்.

உணவு அருந்தியபோது...
பின்பு நோயாளி ராஜா உணவு சாப்பிட்டு கொண்டிருந்ததாலும், தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாலும் அவர் அருகில் இருந்த சி-பேப் மெஷின் ஆக்சிஜனை கீழ்தளத்தில் பொருந்தியதால் நோயாளி மணிகண்டனுக்கு ஆக்சிஜன் உடனே செலுத்தப்பட்டது. பின்பு அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதேவேளையில் முதல் தளத்தில் உள்ள நோயாளி ராஜாவிற்கு சி-பேப் மெஷின் ஆக்சிஜனை கண்காணிக்க மருத்துவர்கள் விரைந்தபோது, அவர் தொடர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அவருக்கான மாற்றம் செய்யப்பட்ட சி-பேப் மெஷின் ஆக்சிஜன் சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையிலேயே தான் இருந்தது. இதற்கிடையே, தொடர்ந்து உணவு அருந்தி கொண்டிருக்கும்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. பின்பு டாக்டர்கள் இயன்ற சிகிச்சை அளித்தும் 
சிகிச்சை பலனின்றி நோயாளி ராஜா உயிரிழந்தார்.

இத்தகவல் தெரிந்தவுடன் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story