மதுரை தோப்பூர் அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள்; மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்


மதுரை தோப்பூர் அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள்; மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 21 May 2021 8:18 PM GMT (Updated: 21 May 2021 8:18 PM GMT)

தோப்பூர் அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கை
மதுரை மாவட்டத்தில் 7-5-2021 முதல் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, கொரோனா பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட மதுரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,101 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதி அல்லாத 646 படுக்கைகளும், தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,131 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதி அல்லாத 794 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 2,620 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை மாவட்டம், தோப்பூர் அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளில் முதற்கட்டமாக 200 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை திறந்துவைத்து ஆய்வு செய்தார்.அப்போது, இம்மையத்தில் உடனடியாக கொரோனா தொற்று நோயாளிகளை அனுமதித்து உரிய சிகிச்சை அளித்திட மாவட்ட நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். மேலும், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பூர் எவரெடி ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணகுமார் ரூ.1 கோடிக்கான காசோலையும், பாரமவுன்ட் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ராம் ரூ.30 லட்சத்திற்கான காசோலையும், சுதா மருத்துவமனை சார்பில் டாக்டர் சுதாகர் ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், தேவதாஸ் மருத்துவமனை சார்பில் டாக்டர் சதீஷ் தேவதாஸ் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, கலையரங்கம் திருமண மண்டபம், திருவெறும்பூர் தேசிய தொழில்நுட்பக்கல்லூரி வளாகம் போன்ற இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், என்.ஐ.டி வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருந்துகளையும் பார்வையிட்டு அதன் பயன்களை கேட்டறிந்தார்.

பின்னர் திருச்சி சுற்றுலா மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, முக்கிய பிரமுகர்கள் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கினர்.

Next Story