சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலின்


சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 May 2021 8:50 PM GMT (Updated: 21 May 2021 8:50 PM GMT)

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை உதயநிதி ஸ்டாலின் காப்பாற்றி, ஆம்புலன்சில் ஏற்றி வைத்து, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். மேலும், ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.

சாலை விபத்து
சென்னை செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது உடல் ஆஸ்பத்திரியில் இருந்து அமரர் ஊர்தி வாகனத்தில் செம்மஞ்சேரிக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த வாகனம் மெரினா கடற்கரை காமராஜர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.அப்போது, அமரர் ஊர்திக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர், வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், அமரர் ஊர்தியும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும், சாலையில் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

உதயநிதி ஸ்டாலின் உதவினார்
இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு உதவ முன் வந்தனர். அப்போது அந்த வழியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் வந்து கொண்டிருந்தார். சாலையில் கூடியிருந்த கூட்டத்தை கண்டு தனது காரை நிறுத்தினார். காரை விட்டு இறங்கி வந்த அவர், விபத்தில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்ததும், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தார்.சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, தன்னுடைய உதவியாளர்கள் மூலம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலை கொண்டு வந்த அமரர் ஊர்தி வாகனமும், பழுதாகியதால், வேறொரு அமரர் ஊர்தி வாகனத்தை வரவழைத்து, அந்த வாகனத்தில் உடலை கொண்டு செல்லவும் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.

நேரில் சென்று நலம் விசாரித்தார்
இந்த விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சுங்கத்துறையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பதும், பின்னால் அமர்ந்திருந்தவர், அவரது உறவினர் சுரேஷ் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று காலை விபத்தில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இருவரையும் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தனது சொந்த செலவில், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு உதவிய உதயநிதி ஸ்டாலினுக்கு, காயமடைந்த இருவரும் நன்றி தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் உதயநிதி ஸ்டாலினின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story