ஊரடங்கு நீட்டிப்பா? தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை


ஊரடங்கு நீட்டிப்பா? தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 22 May 2021 2:15 AM GMT (Updated: 22 May 2021 2:24 AM GMT)

ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா பரவல் குறையவில்லை. தொடர்ந்து, அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.ஏற்கனவே, கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 பேர் கொண்ட அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி முடித்தவுடன் காலை 11.30 மணிக்கு அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடனும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்துவது குறித்து இந்த 2 கூட்டங்களிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அனேகமாக, ஜூன் மாதம் 2-வது வாரம் வரை முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது. முழு ஊரடங்கின்போது தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கை இன்னும் தீவிரப்படுத்துவது குறித்து இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே, மீண்டும் தளர்வுகள் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story