நாளை முதல் முழு ஊரடங்கு எதிரொலி: பிற்பகலில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன; பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அள்ளிச்சென்றனர்


நாளை முதல் முழு ஊரடங்கு எதிரொலி: பிற்பகலில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன; பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அள்ளிச்சென்றனர்
x
தினத்தந்தி 22 May 2021 6:48 PM GMT (Updated: 22 May 2021 6:48 PM GMT)

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நேற்று பிற்பகலில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அள்ளிச்சென்றனர்.

ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வில்லா முழு ஊரடங்கு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால், நேற்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்கப்பட்ட காய்கறி, இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம்
வில்லிவாக்கம், பெரம்பூர், திரு.வி.க.நகர், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை உள்பட சென்னை நகரின் அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.நேற்று காலை 10 மணி வரை செயல்பட்ட காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் அதுவரை பரபரப்பாக காணப்பட்ட சாலைகள், அதற்கு பிறகு சற்று வெறிச்சோடின.

தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிப்பு
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் குழுவினருடனும் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அனைத்து கடைகளும் திறந்தன
அதையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில், நேற்று இரவு 9 மணி வரையும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 9 மணி வரையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு மூடப்பட்ட காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் மீண்டும் பிற்பகலில் திறக்கப்பட்டன.அதே போன்று, தியாகராயநகர், பாரிமுனை, கொத்தவால்சாவடி, பெரம்பூர், அயனாவரம், வண்ணாரப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் உள்பட சென்னையில் உள்ள அனைத்து 
பகுதிகளிலும் உள்ள துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்பட்டன.

சாலைகளில் நிறைந்த வாகனங்கள்
இதே போன்று, எலக்ட்ரானிக் பொருட்களின் பிரதான சந்தையான சென்னை ரிச்சி தெருவில் உள்ள செல்போன் கடைகள், கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் கடைகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கடைகளும் திறக்கப்பட்டன. மேலும், சென்னை புதுப்பேட்டையில் உள்ள மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களின் உதிரி பாகங்கள் விற்பனை கடைகளும் திறக்கப்பட்டன. இதனால், நேற்று பிற்பகலில் சென்னை சாலைகளில் மீண்டும் வாகனங்கள் நிறைந்து சென்றதை பார்க்க முடிந்தது. நேற்று காலையில் சாலைகளில் பல இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றி பொதுமக்களின் தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்து கொடுத்தனர். அதேபோன்று, நேற்று காலை முதல் சாலைகளில் சிக்னல்கள் இயங்காத நிலையில், பிற்பகலில் இருந்து அனைத்து சிக்னல்களும் இயங்க தொடங்கின.

பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்
எனினும், நேற்று பிற்பகலில் அவசரமாக அறிவிக்கப்பட்டதால் ரிச்சி தெருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும், முழு அளவில் கடைகள் திறக்கப்படவில்லை. அதேபோன்று, செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை வாங்குவதற்கும் பெருமளவில் மக்கள் வரவில்லை. அதேநேரத்தில், சென்னை 
கொத்தவால்சாவடியில் செயல்படும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார்சைக்கிள்களிலும், சைக்கிள் ரிக்‌ஷாக்களிலும், ஆட்டோக்களிலும் அள்ளிச் சென்றதை பார்க்க முடிந்தது.

இன்று காலை முதலே அனைத்து கடைகளும் இயங்கும் என்பதால் நேற்றையைவிட இன்று அதிக அளவிலான மக்கள் கூட்டம் மார்க்கெட் பகுதிகளில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story