ஊரடங்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


ஊரடங்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 May 2021 7:44 AM GMT (Updated: 23 May 2021 7:44 AM GMT)

முழு ஊரடங்கு நாளை அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் புதிய முழு ஊரடங்கு உத்தரவை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 24-ந் தேதி (நாளை) காலையில் இருந்து இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சரிவர அமல்படுத்த முடியவில்லை. மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காதநிலையில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

 முழு ஊரடங்கு நாளை அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.  தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவ பிரச்சினை ஒரு பக்கம், நிதி நெருக்கடி மற்றொரு பக்கம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டி இருக்கக் கூடாது. நாம் அனைவரையும் விட கொரோனா பெரியது.  தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த வேண்டும்.  ஊரடங்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன்  மருந்து இருப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்றார். 

Next Story