இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு: அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் அலைமோதிய மக்கள் கூட்டம்; பல மடங்கு விலையேறிய காய்கறிகள்


இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு: அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் அலைமோதிய மக்கள் கூட்டம்; பல மடங்கு விலையேறிய காய்கறிகள்
x
தினத்தந்தி 23 May 2021 7:05 PM GMT (Updated: 23 May 2021 7:05 PM GMT)

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நேற்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது. காய்கறிகள் பல மடங்கு விலையேற்றத்துடன் விற்பனையானது.

அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. வழக்கமாக திறக்கப்பட்டு வந்த மளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகளும் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டு இருக்கும்.காய்கறிகள், பழங்கள் வீடு தேடி வரும் வகையில் தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. எனினும், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு கடைகள் மூடப்படும் என்பதால் தேவையான அவசர மற்றும் 
அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் நேற்றும், நேற்றுமுன்தினமும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

விறுவிறு விற்பனை
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 6 மணி முதலே டீக்கடை, காய்கறி, மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. சலூன் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.அதன்படி, சென்னையின் பிரதான காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே மிகவும் பரபரப்பாக காணப்பட்டு விறுவிறுப்பான விற்பனை நடைபெற்று வந்தது. அதாவது, காய்கறி சில்லரை கடைகள் காலை 6 மணிக்கு திறக்க வேண்டி இருந்ததால், நள்ளிரவு முதலே காய்கறி வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளைவாங்கிச் சென்றனர்.

திடீர் அறிவிப்பு
ஏற்கனவே, அறிவித்த அறிவிப்பின்படி, நேற்று தளர்வில்லாத முழு ஊரடங்கு என்பதால், காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகளும் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், கோயம்பேட்டில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் நேற்று முன்தினம் அதிக அளவில் காய்கறிகளை வர வைக்கவில்லை.இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் திடீரெனதமிழக அரசு நேற்றும், நேற்று முன்தினமும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்து வைக்கலாம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகலிலேயே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அதன்படி, கோயம்பேடு காய்கறி கடைகளும் திறந்தன.

பல மடங்கு எகிறியகாய்கறி விலை
ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் குறைந்த அளவிலான காய்கறி மட்டுமே இருந்ததாலும், ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் காய்கறி வாங்க வந்ததாலும் நேற்று முன்தினம் காலையில் விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து பல மடங்குகளுக்கு காய்கறி விலை திடீரென எகிறியது. அதே நேரத்தில், காய்கறிகளை அனுப்பி வைக்குமாறு கோயம்பேடு மொத்த 
வியாபாரிகளிடம் இருந்து காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு செல்போன் அழைப்புகள் பறந்தன.அதன்படி, நேற்றுமுன்தினம், இரவோடு இரவாக லாரிகளில் காய்கறிகள் அதிக அளவில் மார்க்கெட்டுக்கு வர ஆரம்பித்தன. எனினும், நேற்று முன்தினம் மாலையில் ஏகிறிய காய்கறி விலை நேற்றும் சிறிது கூட குறையாமல் அதே விலையில் பலமடங்கு அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டன. எனினும், பொதுமக்களும் சிறிதும் சளைக்காமல் மார்க்கெட்டில் முட்டி மோதி காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு
அதே நேரத்தில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலேயே பல மடங்கு விலை உயர்ந்த நிலையில், காய்கறிகளை வாங்கிச் சென்ற சில்லரை வியாபாரிகள் தாங்கள் விற்கும் பகுதிகளில் அதில் இருந்தும் ரூ.30 முதல் ரூ.80 வரை கூடுதலாக தங்கள் இஷ்டப்படி விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்தனர். இதனால், சென்னையின் பிறப்பகுதிகளில் காய்கறிகள் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்வாக காணப்பட்டது என்றால் அது மிகையல்ல.காய்கறி விலையேற்றம் குறித்து, கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கூறும்போது, ‘‘நாளை (இன்று) முதல் முழு ஊரடங்கு என்பதால், காய்கறிகள் வருமோ - வராதோ என்ற பயத்தில் அதிக அளவில் மக்கள் காய்கறி வாங்க வந்ததால் காய்கறி தட்டுப்பாடு காரணமாக விலையேறியது. முழு ஊரடங்கு காலத்தில், காய்கறிகளை வீடு தேடிச்சென்று விற்பனை செய்ய தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்லும் அளவிற்கு காய்கறி விற்க முடியாது என்பதால் வழக்கத்தை விட 40 சதவீதம் குறைவாகவே காய்கறிகள் வருவதற்கே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப காய்கறிகளின் வரத்து அதிகரிக்கப்படும்’’ என்றார்.

ஜவுளி, நகை கடைகள்...
நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால், சென்னை தியாகராய நகர் பகுதிகளில் உள்ள சிறிய ஜவுளி கடைகள் முதல் பெரிய அடுக்குமாடி கடைகள் வரை திறந்து இருந்தன. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதனப்பொருட்கள் விற்பனை கடைகள், நகைக்கடைகளும் திறந்திருந்தன.இதேபோன்று நகரின் பிறப் பகுதிகளான வண்ணாரப்பேட்டை, என்.எஸ்.சி.போஸ் சாலை, புரசைவாக்கம், அண்ணா நகர், சூளைமேடு, ராயப்பேட்டை உள்பட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இந்த கடைகள் அனைத்திலும் பெரும்பாலும் மக்கள்கூட்டம் அலை மோதியது.

இறைச்சி, மீன் கடைகளிலும்...
இதேபோன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆட்டு இறைச்சி கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது வழக்கமாகரூ.800-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி நேற்று ரூ.900 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது.அதே போன்று, சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, திரு.வி.க. நகர் மீன் மார்க்கெட்டுகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன் விலையும் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

மளிகை பொருள் வாங்கிய மக்கள்
மேலும், சென்னையில் நேற்று டீ கடைகள், சலூன் கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. ரிச்சி தெருவில் உள்ள செல்போன், கம்ப்யூட்டர்-லேப் டாப் கடைகள் மற்றும் மின்சாதன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறந்திருந்தன.மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் கொத்தவால்சாவடி மார்க்கெட்டும் நேற்று முழுமையாக திறக்கப்பட்டு இருந்தது. அங்கும் மக்கள் அதிக அளவில் வருகை தந்து தங்கள் வீடுகளுக்கு தேவையான மளிகை பொருட்களைவாங்கிச் சென்றனர்.

மனிதநேயத்தை மறந்த வியாபாரிகள்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சனிக்கிழமை காலை கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி மாலையில் ரூ.30-க்கு விற்கப்பட்டது. இந்த தக்காளி விலை, சென்னையின் பிறப்பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.அதாவது, நேற்று முன்தினம் காலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, அன்றைய தினம் மாலையில் விலையேறி வெளிச்சந்தையில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று, ஒவ்வொரு காய்கறியும் 3 முதல் 4 மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டது.இந்த நிலையில், நேற்று போதுமான அளவு காய்கறிகள் வரத்து வந்த போதிலும் மனிதநேயத்தை மறந்த காய்கறி வியாபாரிகள் செயற்கையாக உயர்த்தப்பட்ட விலையை சற்றும் குறைக்காமல் அதே போன்று சுமார் 5 மடங்குகள் விலை உயர்த்தி விற்பனை செய்தது ஏழை-எளிய, நடுத்தர மக்களை புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது.

தாம்பரம்
அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலை, முத்துரங்கம் சாலை, அப்துல் ரசாக் சாலை மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்களை வாங்க குவிந்தனர். பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, கொரோனா விதிமுறைகளை பின்பற்றவோ வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. வியாபாரம் செய்வதிலேயே மும்முரமாக இருந்தனர்.

இதை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறி மற்றும் பழங்களின் விலையை பல மடங்கி உயர்த்தி ஒரே நாளில் கொள்ளை லாபம் சம்பாதித்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

Next Story