முழு ஊரடங்கின் 2-வது நாள்; போலீசார் தீவிர கண்காணிப்பு


முழு ஊரடங்கின் 2-வது நாள்;  போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 May 2021 6:11 AM GMT (Updated: 25 May 2021 6:11 AM GMT)

மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனை கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

சென்னை,

கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. 

இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தளர்வு இல்லா ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. 2-வது நாளாக இன்றும் சென்னை உள்பட தமிழகத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

வாகன நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடின. முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் மூடப்பட்டன. அந்தவகையில் பரபரப்பான சாலைகள் அனைத்தும் நேற்று வெறிச்சோடி போனதை பார்க்க முடிந்தது.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மக்கள் செல்வதை தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் அங்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் ஊரடங்கை கண்காணிக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 380 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஒரு சில பாலங்களை தவிர 38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்களையும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடி உள்ளனர். அதே போல் நகர் முழுவதும் உள்ள 408 போக்குவரத்து சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய வாகனங்கள், முன்கள பணியாளர்களின் வாகனங்கள் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்பட்டன. ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து தேவையில்லாமல் ரோடுகளில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல் அனுமதி இல்லாத இருசக்கர வாகனங்கள் ரோட்டில் செல்ல அனுமதிக்கவில்லை. இதை மீறி வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை ஊரடங்கு முடிந்த பிறகு கோர்ட்டு மூலம்தான் மீட்க முடியும். போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருந்த போதிலும் பொது மக்களை எச்சரித்தும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.


Next Story