'ஜாலிக்காக செய்தேன், விபரீதத்தில் முடிந்து விட்டது'- விடிய விடிய நடந்த விசாரணையில் கதறிய ராஜகோபால்!


ஜாலிக்காக செய்தேன், விபரீதத்தில் முடிந்து விட்டது- விடிய விடிய நடந்த விசாரணையில் கதறிய ராஜகோபால்!
x
தினத்தந்தி 25 May 2021 10:39 AM GMT (Updated: 25 May 2021 11:05 AM GMT)

ஆசிரியர் ராஜகோபாலன் மீது முறைப்படி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

சென்னை

ஆன்-லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளி-கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ‘ஆன்-லைன்’ வழி கல்வியை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இவர், ‘ஆன்-லைன்’ மூலம் பாடம் நடத்தும்போது, ‘அரைகுறை அடை அணிந்து கொண்டு மாணவிகளின் உடை, அழகை வர்ணிப்பதாகவும், ‘வாட்ஸ்-அப்’-பில் ஆபாசமான முறையில் தகவல் அனுப்பியும், செல்போனில் அநாகரீகமான முறையில் பேசியும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.

மாணவர்-ஆசிரியர் என்ற புனிதமான உறவை தாண்டி, வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ராஜகோபாலனை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த பள்ளி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஒய்.ஜி.பார்த்தசாரதி நிறுவியது ஆகும். எனவே இந்த விவகாரம் குறித்து நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், பள்ளி நிர்வாகத்துக்கு இ-மெயிலில் கடிதம் அனுப்பினார். அதில், ‘சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எந்தவிதமான தவறான பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும்’ என்றுக் கேட்டுக் கொண்டார்.

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கல்வியாளர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கருத்துகளை பதிவிட்டனர்.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதமும் அனுப்பினார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் குறித்து பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, பத்ம சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். அப்போது, ஆசிரியர் ராஜகோபாலன் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தார். பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த விளக்கத்தை தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் கல்வி அதிகாரி அனிதா அறிக்கையாக தாக்கல் செய்தார்.

இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சார்பில், பெற்றோர்களின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், எப்போதும் மாணவர்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியும் நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று மதியம் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு வருகை தந்தார்.

ஆனால் அவரது விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் போதுமான அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனை அவரது வீட்டில் இருந்து போலீசார் விசாரணைக்காக வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவரது ‘லேப்-டாப்’, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீது முறைப்படி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ஆசிரியர் மீது பாலியல் புகார் - சென்னை பிஎஸ்பிபி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தியாகராய நகர் துணை ஆணையர் முன்னிலையில்  பிஎஸ்பிபி பள்ளி முதல்வர், தாளாளர்  இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

 ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டுள்ளனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், ராஜகோபாலிடம் இது குறித்து விசாரித்த போது ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதையும் தான் ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார். 

மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெர்வித்து உள்ளனர். 

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் ஏன் ராஜகோபால் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜகோபாலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் மேலும் சில ஆசிரியர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், தனியார் பள்ளி நிர்வாகிக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் முன்னாள் மாணவி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

Next Story