மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிரடி கைது: சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ‘போக்சோ’ சட்டத்தில் சிறையில் அடைப்பு


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிரடி கைது: சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ‘போக்சோ’ சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 25 May 2021 9:57 PM GMT (Updated: 25 May 2021 9:57 PM GMT)

‘ஆன்லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

கொரோனா சூழல் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ‘ஆன்லைன்’ வழியாக மாணவிகளுக்கு கல்வியை போதிப்பதற்கு பதில், காமத்தை கற்பித்த சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபா லன் (வயது 59) சிக்கினார்.

அவர், அரைகுறை ஆடையுடன் ‘ஆன்லைன்’ வகுப்புகளை நடத்துவது, மாணவிகளின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு ஆபாச தகவல்களை அனுப்புவது, செல்போனில் அநாகரிமான முறையில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என்று தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவரது தவறான நடத்தை, செயல்பாடுகள் குறித்து ஆதாரங்களுடன் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

ஆசிரியர் ‘சஸ்பெண்டு’

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்பேரில் மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி அனிதா அந்த பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, அதனை அறிக்கையாக பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் தாக்கல் செய்தார்.

பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆசிரியர் ராஜகோபால் சென்னை நங்கநல்லூர் இந்து காலனி 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது அவரது செல்போன், லேப்-டாப்பை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அவர், மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. ‘சைபர் கிரைம்’ போலீசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தகவலை மீட்டனர்.

இந்தநிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விடிய, விடிய ஆசிரியர் ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

வாக்குமூலம்

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

பத்ம சேஷாத்திரி பள்ளியில் நான் கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்பு நடத்தும் முறை அறிமுகம் ஆனது. அப்போது மாணவ-மாணவிகளின் செல்போன் ‘வாட்ஸ்-அப்’ எண்கள் கிடைத்தது.

பாடம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் எந்த நேரமும் எண்ணை செல்போனில் தொடர்பு கொள்ளலாம். குறுந்தகவல்களும் அனுப்பலாம் என்று மாணவிகளிடம் கூறியிருந்தேன். அதன்படி என்னுடைய செல்போன் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு சந்தேகம் கேட்டு குறுந்தகவல் அனுப்பும் மாணவிகளின் சந்தேகத்தை முதலில் நிவர்த்தி செய்வேன். பின்னர் மாணவிகளின் அழகை, ஆடையை வர்ணித்து தகவல் அனுப்புவேன். சினிமாவுக்கு போகலாமா? என்று அழைப்பு விடுப்பேன்.

இந்த தகவலை பார்த்து மாணவிகள் பதில் அளிக்காமல் இருந்தாலோ? என்னை திட்டுவது போல தகவல் அனுப்பினாலோ? தவறுதலாக அனுப்பிவிட்டேன் என்று கூறி சமாளித்து அந்த தகவலை உடனடியாக நீக்கி விடுவேன். தற்போது என்னுடைய சபலம் எனக்கு வினையாக அமைந்துவிட்டது.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறையில் அடைப்பு

ஆசிரியர் ராஜகோபாலன் மீது ‘போக்சோ’ சட்டப்பிரிவு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் (354 (ஏ)), சைகை மூலம் பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல் (509), தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தற்போது கொரோனா காலம் என்பதால், பரிசோதனைக்கு பின்னரே கைதிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். எனவே கைது செய்யப்பட்ட ராஜகோபாலனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை, விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடியிருப்பில் வசிக்கும் ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டில் அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி முகமது பரூக், ஆசிரியர் ராஜகோபாலனை வருகிற ஜூன் 8-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபால் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை முடிவுக்கு பின்னர் அவர், புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை

ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி வகுப்பறையில் தவறாக நடந்து கொண்டது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதுகுறித்து அந்தபள்ளியை சேர்ந்த தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோருக்கு இ-மெயிலில் சம்மன் அனுப்பி, தியாகராய நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் நேற்று விசாரணை நடத்தினார்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார்கள் குவிகிறது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் மீது அப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவியான தற்போது மாடலிங் துறையில் இருக்கும் இளம்பெண் கூறுகையில், ‘10 ஆண்டுகளுக்கு முன்பு என்னோடு படித்த மாணவிகளை தொட்டு பேசுவது என்று இந்த ஆசிரியர் இருந்தார். நாங்கள் அதனை அப்போது சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது தான் அது பாலியல் ரீதியான சீண்டல் என்று உணர முடிகிறது. இந்த ஆசிரியரின் ஆபாச லீலைகள் குறித்து இந்நாள் மாணவி பகிர்ந்த குறுந்தகவலை சமூக வலைத்தளத்தில் இணைத்து நான் வெளியிட்ட பிறகு தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ என்றார்.

எனவே இந்த ஆசிரியரால் பல மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை 94447 72222 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார் தெரிவிப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த எண்ணில் மாணவிகளும், பெற்றோர்களும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story