கருப்பு பூஞ்சை பரவல் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


கருப்பு பூஞ்சை பரவல் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 25 May 2021 10:29 PM GMT (Updated: 25 May 2021 10:29 PM GMT)

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவல் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அவர், நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். மேலும் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்து உள்ளேன். ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. 36 ஆயிரத்துக்கு மேல் இருந்த தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 34 ஆயிரத்து 800 என்ற அளவுக்கு குறைந்து உள்ளது.

சென்னையில் மிக வேகமாகவே குறைந்து வருகிறது. 7 ஆயிரத்து 500-க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 900 ஆக குறைந்து உள்ளது. நிச்சயம் முழுமையாக குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவில் உள்ளது. ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு இக்கட்டான சூழ்நிலை தான் இருந்தது. தற்போது அந்த நிலை தவிர்க்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக ரூர்கேலா, ஜாம்ஷெட்பூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர், தொழில் துறை செயலாளர், மின்வாரிய தலைவர் ஆகியோரது தீவிர நடவடிக்கையால் நிலைமை சீராக உள்ளது. கொரோனா 3-வது அலை வந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை வராத அளவுக்கு கூடுதல் ஆக்சிஜன் உற்பத்திக்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்கனவே நீண்ட கால நீரிழிவு நோயாளிகளுக்கு வந்து உள்ளது. தற்போது கொரோனா வந்த பிறகு அதிகமாக வருவதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதற்காக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள பல்துறை மருத்துவ வல்லுனர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியை செய்ய கூறியிருக்கிறோம். அதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு 10 பேரை தேர்வு செய்துள்ளோம். அவர்களுடன் ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்திவிட்டு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட தற்போது பல காரணங்கள் கூறப்படுகின்றன. நீரிழிவு நோயினால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யும்போது ஸ்டீராய்டு செலுத்தப்படுவதால் இந்த தொற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் அவ்வாறு வரவில்லை என கூறுகிறார்கள். மேலும், தொழில்துறை ஆக்சிஜனை நுகர்வதால் வருவதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். ஆக்சிஜன் உற்பத்தியின்போது மாசு கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால் வருவதாகவும் கூறுகின்றனர். இந்த அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் வல்லுனர் குழுவினர் ஆராய்ச்சி செய்வார்கள். இந்த ஆய்வுக்கு பிறகே சரியான முடிவுக்கு வரமுடியும்.

கொரோனா இறப்பு எண்ணிக்கையை அரசு மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. இறப்புகளை முழுமையாக வெளிப்படுத்தினால் தான் மக்களுக்கு அச்சம் வரும். மேலும் விழிப்புணர்வும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story