பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்


பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
x
தினத்தந்தி 25 May 2021 11:02 PM GMT (Updated: 25 May 2021 11:02 PM GMT)

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.

சென்னை,

சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் ஆணையத்துக்கு டி.ஜி.பி. அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் அலுவலகம் சார்பில் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் சூழலில் இது போன்ற சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளின்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா? என்பதை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story