சென்னையில் 2 நாளில் மட்டும் 3,790 டன் காய்கறி விற்பனை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்


சென்னையில் 2 நாளில் மட்டும் 3,790 டன் காய்கறி விற்பனை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 26 May 2021 8:05 PM GMT (Updated: 26 May 2021 8:05 PM GMT)

சென்னையில் 2 நாளில் மட்டும் 3,790 டன் காய்கறி விற்பனை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளான காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை நடமாடும் வாகனங்கள் மூலம் 200 வார்டுகளிலும் வினியோகிக்க கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மற்றும் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி 25.5.2021 அன்று கோயம்பேடு வணிக வளாகத்தில் இருந்து மண்டலங்களுக்கு 2,102 சிறிய வகையிலான மோட்டார் வாகனங்களின் மூலமும், மண்டலங்களில் இருந்து வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் 5,345 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலமும் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களில் நடமாடும் வாகனங்களின் மூலம் 3,790 டன் காய்கறிகள், 1,220 டன் பழங்கள் மற்றும் 31 டன் பூக்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், கோவிட்-19 எனும் இடத்தில் உள்ளீடு செய்தால் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பெயர், அலைபேசி எண், வாகன எண் மற்றும் விற்பனை செய்யும் இடம் அல்லது வார்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story