கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 26 May 2021 10:54 PM GMT (Updated: 26 May 2021 10:54 PM GMT)

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வந்தபோது பக்கத்து வீட்டில் கூட பேச பயந்தார்கள். எங்கே கொரோனா வந்தால் 4 நாட்களில் இறந்து விடுவோமோ? என்ற அச்சம் இருந்தது. ஆனால் இன்றைக்கு மக்களிடம் பயம் போய்விட்டது.

இருந்தாலும் மக்களை எல்லாம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கையெடுத்து கும்பிட்ட, கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டு இருக்கிறார். தற்போது தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது. அதில் விரும்பமுள்ள ஆசிரியர்களை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொள்ள ஏதுவாக கூடுதல் தடுப்பூசியை மாநில சுகாதார துறையிடும் கேட்டுள்ளோம். விரைவில் அவை கிடைத்துவிடும்.

பிளஸ்-1 வகுப்பில் மாணவர்கள் குரூப் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. இதனால் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி் என்ற நிலையில் எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலேசானை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ்-1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story