தேனி, திண்டுக்கல், நீலகிரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தேனி, திண்டுக்கல், நீலகிரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 May 2021 1:21 AM GMT (Updated: 27 May 2021 1:21 AM GMT)

வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இடையில் டவ்தே புயல் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கிய நிலையில், தற்போது யாஸ் புயல் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை கொட்டுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, வெப்பச்சலனத்தால் இன்று (வியாழக்கிழமை) தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல், நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு சில நேரங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் ஆய்வு மையம் கூறி இருக்கிறது. 

Next Story