ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு தங்கு தடையின்றி கோவில்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு


ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு தங்கு தடையின்றி கோவில்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 27 May 2021 7:56 PM GMT (Updated: 27 May 2021 7:56 PM GMT)

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு தங்கு தடையின்றி கோவில்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.

சென்னை,

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினைப் போக்கும் விதமாக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி திருக்கோவில்களில் இருந்து உணவுப்பொட்டலங்களை தயார் செய்து உணவு தேவைப்படுவோருக்கு வழங்கிட ஏற்கனவே ஆணையிடப்பட்டது. அதன்படி, கடந்த 12-ந் தேதி முதல் கோவில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு உணவு பொட்டலங்கள் ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 5-ந் தேதி வரை உணவுப்பொட்டலங்களை வழங்கிட திருக்கோவில் நிர்வாகங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த சேவையை தொடருவதற்கு 349 திருக்கோவில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருக்கோவில்களுக்கு இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை கணக்கிட்டதில் 2 கோடியே 51 லட்சத்து 7ஆயிரத்து 647 ரூபாய் தேவைப்படுவது தெரியவந்தது.

ஏழைகளுக்கு தங்கு தடையின்றி உணவு பொட்டலங்கள் வழங்கிடும் பொருட்டு, இந்த நிதியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து திருக்கோவில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story