சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை விளையாட்டு பயிற்சியாளர் மீது புகார்


சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை விளையாட்டு பயிற்சியாளர் மீது புகார்
x
தினத்தந்தி 27 May 2021 9:01 PM GMT (Updated: 27 May 2021 9:01 PM GMT)

சென்னையில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விளையாட்டு பயிற்சியாளர் மீது பரபரப்பு புகார் கூறப்படுகிறது.

சென்னை,

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

போக்சோ சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்பு மூலமாக அவர் பாலியல் தொல்லை கொடுத்தது மாணவர்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து சில நாட்கள் ஆன நிலையில் தற்போது தடகள வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

சென்னையில் உள்ள பிரைம் தடகள விளையாட்டு பயிற்சி மையத்தில் தடகள பயிற்சியாளராக பணியாற்றியவர் நாகராஜன் (வயது 59). இவர் பயிற்சிக்கு வந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக இணையதள வாயிலாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை பூக்கடை உதவி கமிஷனர் பாலகிருஷ்ணபிரபு விசாரணை நடத்தி வருகிறார். ஆனால் இது சம்பந்தமாக யாரும் புகார் எதுவும் போலீசில் கொடுக்கவில்லை.

பயிற்சியாளர் மறுப்பு

இந்த புகார் குறித்து பயிற்சியாளர் நாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

நான் 35 வருடமாக இந்த பயிற்சி கொடுத்து வருகிறேன். 200 பேர் நான் கொடுத்த பயிற்சி மூலம் பலன் அடைந்துள்ளனர். தற்போது நான் அந்த பயிற்சி மையத்தை விட்டு விலகி விட்டேன். முதல் முறையாக இந்த புகார் எழுந்துள்ளது.

என்னிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை ஒருவர் காதலில் ஈடுபட்டார். நான் அதை கண்டித்தேன். அவர் வாயிலாக என்மீது இந்த தவறான புகார் கிளப்பி விடப்பட்டது. அது பழைய சம்பவம்.

இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனரை நான் சந்தித்து விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளேன். அதற்காக அனுமதி கேட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story