வரும் கல்வி ஆண்டு முதல் தமிழிலும் என்ஜினீயரிங் பாடம் நடத்தலாம் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி


வரும் கல்வி ஆண்டு முதல் தமிழிலும் என்ஜினீயரிங் பாடம் நடத்தலாம் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி
x
தினத்தந்தி 28 May 2021 12:07 AM GMT (Updated: 28 May 2021 12:07 AM GMT)

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழிலும் என்ஜினீயரிங் பாடம் நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

தேசிய கல்விக்கொள்கையில் சில கருத்துகள் பலரால் எதிர்க்கப்பட்டாலும், தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற கொள்கை அதில் இடம்பெற்று இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக என்ஜினீயரிங் பாடங்கள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கற்றுக்கொடுக்கப்படும் என ஏற்கனவே மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான ஆக்கப்பூர்வ பணிகளில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தீவிரமாக இறங்கியது.

இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் கனவு, நனவாகும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, ஜப்பான் மற்றும் சீனா நாடுகள் தங்களுடைய மொழிகளில் முழு கல்வியையும் வழங்கி வருகின்றன. அந்தவகையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், ஆங்கில மொழியில் இருந்த பாடங்களை22 மொழிகளில் மொழி பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது.

8 மொழிகளில் மொழிபெயர்ப்பு

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் என்ஜினீயரிங் படிப்புகளை மாணவர்கள் ஆங்கிலம் அல்லது தமிழில் விரும்புகிறார்களா? என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 42 சதவீதம் பேர் தாய்மொழியான தமிழுக்கு ஆதரவை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ், மராட்டியம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 8 மொழிகளில் என்ஜினீயரிங் பாடங்கள் முதலில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறும்போது, ‘மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். இதனால் அவர்கள் என்ஜினீயரிங் படிப்பு அடிப்படைகளை மிகச்சிறந்த முறையில் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி

முதற்கட்டமாக 8 மொழிகளில் என்ஜினீயரிங் படிப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக இந்தியில் 132 பாடப்பிரிவுகளுக்கான பாடங்களும், தமிழில் 94 பாடப்பிரிவுகளுக்கான பாடங்களும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 90 முதல் 92 சதவீதம் வரை துல்லியமாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடப்பிரிவுகளில் வரும் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் சூத்திரங்கள் மொழி பெயர்க்கப்படாமல் அப்படியே குறிப்பிடப்பட்டு இருக்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்துள்ளது.

மொழி பெயர்க்கப்பட்ட பாடங்களை வரும் கல்வியாண்டில் இருந்து கற்பிப்பதற்கான அனுமதியை ஏ.ஐ.சி.டி.இ. வழங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்து 11 மொழிகளில் என்ஜினீயரிங் பாடங்கள் மொழி பெயர்க்கப்பட இருப்பதாகவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் என்ஜினீயரிங் பாடங்கள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தமிழில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story