கொரோனா 2-வது அலையில் கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


கொரோனா 2-வது அலையில் கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 28 May 2021 8:17 PM GMT (Updated: 28 May 2021 8:17 PM GMT)

தமிழகத்தில் முதல் அலையை விட கொரோனா 2-வது அலையில் கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு தினமும் 3 வேளை உணவு அளிக்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற 2 ஆயிரத்து 386 பேருக்கு தினமும் அவரவர் வீடுகளில் 3 வேளை உணவை அளிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஆலோசனை பெற்ற உணவை, 100 களப் பணியாளர்கள் வழங்குவார்கள்.

8 ஆயிரம் படுக்கைகள் காலி

கோவையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதன்மைச் செயலாளர் பொறுப்பில் உள்ள தனி அலுவலர் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

சென்னையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசிடம் ரூ.85.47 கோடி கொடுத்து 26 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இருக்கிறோம். அதில் இதுவரை 13.5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் அதிகரிக்கிறது

அதையடுத்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில், வென்டிலேட்டர் வசதியுடன் 120 படுக்கைகளை தொடங்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இங்கு 900 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், வென்டிலேட்டர் வசதியுடன் 120 படுக்கைகள் இன்று (நேற்று) முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் முதல் அலையைவிட, 2-வது அலையில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை கண்டறிந்து ஆய்வு செய்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக சரிந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அதிகம் உள்ளது. அதிகளவில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்வது தமிழகம்தான் என்று ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் 276 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு 1.70 லட்சத்துக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story