உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை பயனாளிகளுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார் தமிழக அரசு தகவல்


உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை பயனாளிகளுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 28 May 2021 9:12 PM GMT (Updated: 28 May 2021 9:12 PM GMT)

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலக வளாகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’’ துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் பேசினார்.

சென்னை,

கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தமிழகம் முழுவதும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, ஆட்சியில் அமர்ந்ததும் அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஏற்கனவே “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காண்பதற்காக “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’’ என்ற புதிய துறையை உருவாக்கினார். அந்த துறைக்கென்று சிறப்பு அதிகாரியை நியமித்து மக்களின் மனுக்கள் மீது தீர்வு காணும் பணியை உடனே தொடங்கி வைத்தார். இதற்கான அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் உள்ள செங்கல்வராயன் வளாகத்தில் அமைந்துள்ளது.

4 லட்சம் மனுக்கள்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் பரப்புரையில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

இதுவரை சுமார் 4 லட்சம் மனுக்கள் இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடனடி தீர்வு

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

விரிவான ஆய்வு

இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

துறை ரீதியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

தொலைபேசியில்....

இத்துறையின் கீழ் பயனடைந்த தேனி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கிடைக்கப்பெற்ற பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், கொேரானா தொற்று பரவாமல் இருக்க ஒவ்வொரு பயனாளிகளிடமும் முக கவசம் கட்டாயம் அணியுமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்” துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயனாளிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய உரையாடல் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு வந்திருந்தீர்களா?

ஆண் பயனாளி:- ஆமாம் சார்.

மு.க.ஸ்டாலின்:- சரி, என்ன கோரிக்கை வைத்திருந்தீர்கள்? என்ன குறையைச் சொல்லி மனு கொடுத்தீர்கள்?

பயனாளி:- சிமெண்டு சாலை கேட்டு மனு கொடுத்திருந்தேன்?

மு.க.ஸ்டாலின்:- அது நடவடிக்கை எடுத்த பிறகு இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

பயனாளி:- முதலில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணினார்கள். என்ஜினீயர்கள் போன் செய்தார்கள். பின்னர் காலையில் 2 மேடம் போன் பண்ணினார்கள். அதற்கான வேலையை தொடங்கப்போவதாக சொன்னார்கள்.

மு.க.ஸ்டாலின்:- வேலூரில் நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

பயனாளி:- எனக்கு அணைக்கட்டு தொகுதி.

இவ்வாறு அந்த உரையாடல் நடைபெற்றது.

Next Story