பாலியல் புகார் எழுந்ததால் சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் கைது செய்ய போலீசார் தீவிரம்


பாலியல் புகார் எழுந்ததால் சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 28 May 2021 10:11 PM GMT (Updated: 28 May 2021 10:11 PM GMT)

சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைனில் பாடம் நடத்தியபோது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் துணிச்சலாக புகார் கொடுக்கலாம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதனால் தோண்டத் தோண்ட வரும் புதையலைப்போல தமிழகம் முழுவதும் இருந்து 30 புகார்கள் குவிந்தன. சென்னையில் தடகள விளையாட்டு பயிற்சியாளர் நாகராஜன், பயிற்சியின்போது தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு புகார் எழுந்தது. அடுத்தகட்டமாக சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றும் ஜே.ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இவர் சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் வேலைபார்த்தபோது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் எழுப்பிய இந்தப் புகார் பற்றி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் ஆசிரியர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இது பற்றி விசாரணை நடத்த ஒரு கமிட்டியை அமைத்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அந்த மாணவி பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கிறார். அம்மாணவியிடம் விசாரணை நடத்தி புகார் மனு பெற போலீசார் முயற்சித்தனர். ஆனால் அந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. குறிப்பிட்ட மாணவியிடம் புகார் மனு பெறுவதற்கு போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கைதாவார்

புகார் மனு பெற்றவுடன் உரிய வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஆனந்த் மீது கைது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக உள்ளனர்.

Next Story