அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 May 2021 10:29 AM GMT (Updated: 29 May 2021 10:29 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

நாளை (30.05.2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

31.05.2021 முதல் 01.06.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

02.06.2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில், மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும்.

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story