ஈழ தமிழர்களுக்கும் நெருக்கடி கால நிதியுதவி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 May 2021 11:01 PM GMT (Updated: 30 May 2021 11:01 PM GMT)

அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ தமிழர்களுக்கும் நெருக்கடி கால நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை, 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அகதிகள் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் மற்றும் சிறப்பு முகாம் எனப்படும் தடுப்பு முகாம்களில் கணிசமான எண்ணிக்கையிலும் என ஒரு லட்சத்துக்கும் மேலான ஈழச்சொந்தங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

ஈழத்தமிழர் முகாம்கள் போதிய இடவசதியின்றி நெருக்கடிமிக்கதாக இருப்பதாலும், சுகாதாரமற்ற முறையிலும், சரியான கழிப்பிட வசதிகளின்றி அக்குடியிருப்புகள் அமைந்திருப்பதாலும் அங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழக அரசு உடனடியாக முகாம்களின் சுகாதாரத்தை ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் உடல்நலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகிறது. ஆகவே, அங்கு வாழும் ஈழச்சொந்தங்களிடம் கொரோனா நோய்த்தொற்று சோதனைகளைச் செய்வதோடு, தடுப்பூசி முகாம்கள் அமைத்து அவர்களது உயிர்க்காக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாகத் தற்போது அறிவித்து வழங்கி வரும் நெருக்கடிகால நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்கிட வேண்டும். தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்காக சொந்தப் பிணையில் விடுவிப்பது போல, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story