மாநில செய்திகள்

கோவை ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று கவச உடையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு + "||" + At Coimbatore Hospital Go to Corona Ward MK Stalin study of armor

கோவை ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று கவச உடையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவை ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று கவச உடையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோவை ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று கவச உடையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற் கொண்டார். அப்போது நோயாளிகளிடம் தேவைகளை அவர் கேட்டறிந்தார்.
கோவை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இ்ல்லா முழு ஊரடங்கு ஜூன் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி சேலம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 21-ந்தேதி ஆய்வு செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

அரசின் தீவிர நடவடிக்கையால் தலைநகர் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில், கோவையில் தொற்று அதிகரித்து முதலிடத்தை பெற்றது. இதனால் அங்கு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை சென்றார்.

முன்னதாக ஈரோடு சென்ற மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளிடம், ‘உங்களின் ஒத்துழைப்பால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது. உங்களின் சேவை மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டு உள்ள 5 டாக்டர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு திருப்பூர் சென்றார்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து 20 கார் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் வசதி இருப்பதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 6 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருப்பூரில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், பின்னர் கோவை வந்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், சிறிது தயங்கினர்.

ஏனெனில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்றால் முழு கவச உடை (பி.பி.இ. கிட்) அணிந்து மட்டுமே செல்ல வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அவருக்கு முழு கவச உடை வழங்கப்பட்டது.

அந்த உடையை அவர் தான் அணிந்து இருந்த வேட்டி, சட்டையின் மேல் அணிந்து கொண்டார். அந்த ஆடையை அணிந்து கொள்ள உதவியாளர் ஒருவர் அவருக்கு உதவி செய்தார். அத்துடன் அவர் கையுறை மற்றும் பிரத்யேக கண் கண்ணாடி ஆகியவற்றையும் அணிந்து கொண்டார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சாதாரண சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, சத்தான உணவு வழங்கப்படுகிறதா?, ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

தங்களை பார்க்க வந்திருப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை அறிந்த நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், முதல்-அமைச்சரை பார்த்து, ‘நீங்கள் எங்களை பார்க்க வந்தது பெருமையாக உள்ளது. இதுபோன்று எந்த ஒரு முதல்-அமைச்சரும் கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்ததாக தெரியவில்லை. எனவே நீங்கள், உங்கள் உயிரையும் துச்சமென நினைத்து எங்களை சந்தித்து ஆறுதல் கூற வந்திருக்கிறீர்கள். இது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. இங்கு எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

பின்னர் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் சென்றார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் நோயாளி மு.க.ஸ்டாலினை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்தினார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கைகூப்பி வணக்கம் தெரிவித்ததுடன், எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு உடல் நலம் விசாரித்தார்.

இதையடுத்து அங்கிருந்து சென்று கொரோனா பரிசோதனை மையத்தையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க வேண்டும் என்று டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்- அமைச்சரின் தனி செயலாளர் உமாநாத், கலெக்டர் நாகராஜன், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் ஆகியோரும் முழு கவச உடை அணிந்து உடன் சென்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்-அமைச்சர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை பிரிவுக்கு நேரில் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரிப்பது இதுவே முதல் முறையாகும்.

வேறு எந்த மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளும் இதுபோன்று கொரோனா வார்டுக்கு நேரில் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்பட்டவை