தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்: ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல கட்சியை கொண்டு செல்வேன்' சசிகலா பேசிய ஆடியோவால் மீண்டும் பரபரப்பு


தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்: ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல கட்சியை கொண்டு செல்வேன் சசிகலா பேசிய ஆடியோவால் மீண்டும் பரபரப்பு
x
தினத்தந்தி 31 May 2021 1:15 AM GMT (Updated: 31 May 2021 1:15 AM GMT)

சசிகலா, தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று கட்சியை கொண்டு செல்வேன் என்று சசிகலா பேசிய ஆடியோவால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆகி சென்னைக்கு காரில் வந்த போது, சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை திரும்பிய அவரை, சில அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்தனர். அரசியலில் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒரு அதிரடி அறிவிப்பை சசிகலா வெளியிட்டார். அதில், ‘நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்' என்று கூறினார்.

இந்த அறிவிப்பின் மூலம் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், அ.தி.மு.க. தோல்வியை சந்தித்து, ஆளும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சசிகலா விஸ்வரூபம் எடுத்து வருகிறார். சசிகலா, தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சசிகலா தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்ற தொண்டரிடம், சசிகலா பேசிய செல்போன் உரையாடல் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லெட்டர்’ எழுதமுடியவில்லை

கோபால் என்ற தொண்டரிடம், சசிகலா பேசிய உரையாடல் விவரம் வருமாறு:-

சசிகலா:- ஹலோ....

தொண்டர்:- அம்மா வணக்கம் அம்மா...

சசிகலா:- வணக்கம் கோபால் பேசுகிறீர்களா? நாமக்கலில் இருந்து....

தொண்டர்:- ஆமாம் அம்மா... நல்லா இருக்கீங்களா?

சசிகலா:- நல்லா இருக்கேன்... உங்கள் ‘லெட்டர்' வந்தது. பார்த்தேன்.

தொண்டர்:- ரொம்ப சந்தோஷம் அம்மா...

சசிகலா:- கொரோனா காலமாக இருப்பதால், தபால் அலுவலகம் இல்லை. ‘லெட்டர்' எழுதி அனுப்ப முடியவில்லை. அதனால் தான் ‘போன்ல' பேசுறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று கட்சியை....

தொண்டர்:- நாங்களும் உங்களை பார்க்க ரொம்ப ஆர்வத்தோடு இருக்கிறோம்.

சசிகலா:- சரி... சரி... நிச்சயமாக விரைவில் வந்து பார்க்கப்போறேன். கவலைப்படாமல், தைரியமாக இருங்கள். எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம். தலைவர் (எம்.ஜி.ஆர்.), அம்மா (ஜெயலலிதா) கட்சியை எந்த அளவுக்கு வைத்திருந்தார்களோ, அந்த அளவுக்கு நான் கொண்டு செல்வேன். ஒன்னும் கவலைப்படாதீங்க..

தொண்டர்:- அம்மா எனக்கு ஒரே ஒரு வேதனை தான் அம்மா....

சசிகலா:- என்ன?

தொண்டர்:- இந்த தி.மு.க.வை பார்க்கும் போது என் மனசு எல்லாம் வேதனையாக இருக்குது. நம்ம கொடி பறக்க வேண்டிய இந்த நேரத்துல. எடப்பாடி பழனிசாமியால ரத்த கண்ணீர் வருதும்மா...

சசிகலா:- அவங்க செய்த தப்புக்கு நான் என்ன பண்ண முடியும்? சொல்லுங்க...

விரைவில் வந்து நல்லது பண்ணுவேன்

தொண்டர்:- தலைவர் (எம்.ஜி.ஆர்.), அம்மாவை (ஜெயலலிதா) உயிருக்கு உயிராக நேசித்தேன். அதற்கு பிறகு உங்களைத்தான் பெற்ற தாயாக நேசிக்கிறேன் அம்மா.

சசிகலா:- சரி.. சரி... எல்லாத்துக்கும் ஒரு நல்ல முடிவு வரும். கவலைப்படாதீங்க... தைரியமாக இருங்க எல்லோரும்... துணிச்சலோடு இருங்கள். நான் விரைவில் வந்து நல்லது பண்ணுவேன் நிச்சயம்.

தொண்டர்:- உங்களை நம்பிதான் இருக்கோம் அம்மா...

சசிகலா:- நிச்சயமா... நிச்சயமா.... சீக்கிரம் வந்துடுறேன்.

தொண்டர்:- ரொம்ப சந்தோஷம் அம்மா... நன்றி அம்மா....

சசிகலா:- நன்றி... நன்றி... வணக்கம்.

இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.

மீண்டும் பரபரப்பு

சசிகலாவின் இந்த உரையாடல் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story