மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மரணம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மரணம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 31 May 2021 1:23 AM GMT (Updated: 31 May 2021 1:23 AM GMT)

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மைதிலி சிவராமன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான மைதிலி சிவராமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த இவர், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

மைதிலி சிவராமனின் கணவர் கருணாகரன். மகள் கல்பனா, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆவார்.

1966-69 காலகட்டத்தில் ஐ.நா. சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவின் ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். பணிக்காலம் முடிந்து இந்தியா வந்த அவர், இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். கீழ்வெண்மணி படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன், தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தவர் என்பதும் வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி, உண்மைகளை ஆவணப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைதிலி சிவராமன் மறைவுக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான மைதிலி சிவராமனின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்ணுரிமைப் போராளியான அவர், முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்தில் உதவி ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்து ஒரு புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர்.

கீழ்வெண்மணி துயரத்தை, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை ‘ஹண்டட் பை பையர்’ என்ற புத்தகமாக வெளிவந்து, இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத்தட்டிக் கேட்கப் போராடி, அம்மக்களுக்கு நீதி கிடைத்திட இரவு பகலாக உழைத்தவர். பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும், அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமனின் குரல்தான் இருக்கும்.

போர்க்குணமும், துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழ்நாடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும்.

மைதிலி சிவராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story