சென்னையில் இறப்பு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யாத அரசு மருத்துவமனைகள் சான்றிதழ் பெற முடியாமல் உறவினர்கள் அவதி


சென்னையில் இறப்பு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யாத அரசு மருத்துவமனைகள் சான்றிதழ் பெற முடியாமல் உறவினர்கள் அவதி
x
தினத்தந்தி 31 May 2021 1:49 AM GMT (Updated: 31 May 2021 1:49 AM GMT)

சென்னையில் இறப்பு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யாத அரசு மருத்துவமனைகளால், இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் உறவினர்கள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை, 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் உயிரிழந்தால் மாநகராட்சியின் https://www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வீட்டில் இறப்போரின் விபரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி, மயானங்களில் அளிக்கும் சான்றிதழ் உடன் இறப்பு சான்றிதழ்க்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவமனைகளில் உயிரிழப்போர் விபரங்கள், அந்தந்த மருத்துவமனைகளால் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின் மாநகராட்சி சுகாதார அலுவலரின் கையொப்பமிட்ட இறப்பு சான்றிதழை உறவினர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், உயிரிழந்தோரின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வரும் மாநகராட்சி அதிகாரிகளை, தொடர்பு கொண்டு தினமும் இறப்பு சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் தொந்தரவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது. குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் 24-ந்தேதிக்கு மேல் இறப்பு விவரங்களை பதிவேற்றம் செய்யவில்லை.

மருத்துவமனை ‘டீன்’ மற்றும் மருத்துவ நிலைய அலுவலர் ஆகியோரிடம் பல்வேறு கட்ட பேச்சு நடத்தினோம். பின்னர், ஏப்ரல் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை இறப்பு விவரங்களை பதிவேற்றம் செய்தனர். அதன்பின்னர், ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 8-ந்தேதி வரை உள்ள விவரங்களை நேரடியாக எங்களிடம் அளித்துள்ளனர். ஆனால் மாநகராட்சியால் நேரடியாக இறப்பு விபரங்களை பதிவேற்றம் செய்ய முடியாது. மருத்துவமனைகள் பதிவேற்றம் செய்து அனுப்பினால் மட்டுமே எங்களால் சான்றிதழ் வழங்க முடியும்.

இதேபோன்று சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளும் ஒரு மாதத்திற்கான இறப்பு விபரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story