மாநில செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல் + "||" + Phase 2 relaxation Full curfew Effective from tomorrow Including Coimbatore Wholesale markets are allowed to operate

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை, 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி (இன்று) வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இந்த ஊரடங்கை 7-ந் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-

ரேஷன் கடைகள் இயங்கலாம்

* ஆங்கில, நாட்டு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், செல்லப்பிராணிகளுக்கான தீவன விற்பனையகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பால், குடிநீர் மற்றும் பத்திரிகைகள் வினியோகம் செய்ய அனுமதியுண்டு.

* வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப்பொருட்களை அனுமதியுடன் விற்பனை செய்யலாம். ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மளிகைப்பொருட்கள் ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி உண்டு.

* ரேஷன் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரை இயங்கலாம்.

* பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்படலாம். கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு அனுமதி உண்டு.

* ஓட்டல்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 1 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என மூன்று வேளையும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி உண்டு.

மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி

* மின்-வணிக நிறுவனங்கள் காலை 8 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

* காய்கறி, பழம், பூ மொத்த மார்க்கெட்டுகள் (கோயம்பேடு மற்றும் மாவட்டங்களில் செயல்படும் மொத்த மார்க்கெட்டுகள்) இயங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்த மார்க்கெட்டுகளில் உள்ள சில்லறை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

* ரெயில்வே, விமானம், கப்பல் துறைமுக இயக்கம் அனுமதிக்கப்படுகிறது.

* மின்சாரம், குடிநீர், சுகாதாரப் பணிகள், தொலைத்தொடர்பு, தபால் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன.

* பத்திரிகை, ஊடக ஊழியர்கள் பணிபுரிய அனுமதி உண்டு.

* அத்தியாவசிய சேவைகளுக்காக தலைமைச்செயலகம், மருத்துவம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதிச் சந்தைகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்கலாம்.

இ-பதிவு அனுமதி

* ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சேவைகள் இயங்க அனுமதி உண்டு.

* அவசர பயணங்களுக்கான விசா வழங்கும் மையங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்கலாம். அந்த பணியாளர்கள் நிறுவன அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி உண்டு.

* கண்காணிப்பு இல்லங்கள். கூர்நோக்கு இல்லங்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மையங்களில் பணியாற்றுவோர் உரிய அடையாள அட்டை அல்லது இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

* வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகள், விவசாயப் பொருட்கள், இடுபொருட்கள் போக்குவரத்துக்கு அனுமதியுண்டு.

* கால்நடை, கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பண்ணைகள் இயங்க அனுமதி உண்டு.

* குளிர்பதனக் கிடங்குகள், கிடங்குகள் உள்ளிட்டவற்றுக்கான சரக்கு கையாளும் சேவைகளும், துறைமுகங்கள், விமானம் மற்றும் ரெயில் நிலையங்கள், கன்டெய்னர் மையங்கள் தொடர்பான சேவைகளுக்கு அனுமதியுண்டு.

ரெயில்-விமான நிலையங்களுக்கு...

* வீட்டில் இருந்து விமான-ரெயில் நிலையங்கள் செல்வதற்கும், அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்கும் பயணம், பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* அத்தியாவசியப் பொருட்கள் தயாரிப்பு, தொடர் இயக்க தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி ஆர்டர்களை மேற்கொள்ளும் வகையில், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம், கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் அனுமதியில்லை.

* தொழிற்சாலைகள் ஒரு மாதத்துக்குள் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஓட்டல்கள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டிருந்தால், அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்.

* கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில், அங்கு தங்கியிருந்து பணியாற்றுவோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில்...

* தன்னார்வலர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்கள் கொண்டுசெல்வோர் உரிய இ-பதிவு அடிப்படையில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* மாநிலங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்துக்குள்ளும் தனிநபர்கள் மருத்துவ அவசரங்கள் மற்றும் இறப்பு, இறுதிச்சடங்குக்கு செல்வதற்கு இ-பதிவு அவசியம். அதேபோல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரெயில் மூலம் வருவோர் இ-பதிவு மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதியில் எவ்வித தளர்வுகளும் கிடையாது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு- கடை வீதிகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்
நாளை முதல் தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
2. ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஓசூரில் இருந்து செல்லும் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
3. மராட்டியத்தில் முழு ஊரடங்குக்கு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எதிர்ப்பு
மராட்டியத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை