ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்- தமிழக சுகாதாரத்துறை செயலாளர்


ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்- தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
x
தினத்தந்தி 31 May 2021 12:11 PM GMT (Updated: 31 May 2021 12:15 PM GMT)

மத்திய அரசு தாமதத்தால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்கூறி உள்ளார்.

சென்னை

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின.  தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன என்றும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியாகியது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த் ஆலோசனை கூடம் நடைபெற்றது.

 பின்னர்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில்  மத்திய அரசு தாமதிப்பதால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு பணம் செலுத்திய பிறகும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது. 

தடுப்பூசி போட பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல்  5 வரை தடுப்பூசி போட முடியாது.ஜூன் 6இல் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும்

தமிழகத்திற்கு இதுவரை 96.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 87.70 லட்சம் தடுப்பூசிகள்  பயன்படுத்தப்பட்டு உள்ளன.  நாளையோடு தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிடும். 

உலகளாவிய டெண்டர் கேட்டுள்ளோம். ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது.மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.ஜூன் 2வது வாரத்தில் தடுப்பூசிகள்  கிடைக்கப்பெறும்

இறப்பு சான்றிதழ் ஆய்வுக்கு பின் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story