புகை பழக்கத்தில் இருந்து மீள துடிப்போருக்கு அரசு உதவ வேண்டியது கடமை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


புகை பழக்கத்தில் இருந்து மீள துடிப்போருக்கு அரசு உதவ வேண்டியது கடமை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 May 2021 1:20 PM GMT (Updated: 31 May 2021 1:20 PM GMT)

தமிழகத்தில் புகையிலைக்கும், புகை பழக்கத்துக்கும் அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான சேவையை மாநில அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புகை பழக்கம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் சில நன்மைகளையும் விதைத்திருக்கிறது. புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 60 சதவீதத்தினர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கொரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

புகை பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ந் தேதி உலக புகையிலை ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் புகை பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும்.

இளைஞர்கள் சொத்துகள்

இந்தியாவில் புகை பிடிப்பவர்களில் 12 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு மாற்றாக 12 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து மறைமுக விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் செய்கின்றன. இந்தியாவின் சொத்துகள் இளைஞர்கள்தான். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். அதை தடுக்கும் நோக்கத்துடன் புகையிலைக்கும், புகைப்பழக்கத்துக்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் ‘‘கைவிட உறுதியெடுங்கள்’’ முழக்கத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story